கோல் இந்தியா நிறுவன பணியாளர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. இதனால் 75 சதவீதத்துக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பணியாளர்களுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்தார். இதில் கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பட்டாச்சார்யா மற்றும் அமைச்சக உயரதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். கோல் இந்தியா வசம் இருக்கும் 438 சுரங்கங்களில் 290 சுரங்கங்கள் செயல்படவில்லை.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற வேலை நிறுத்தம் நடைபெற்றதில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 100 அனல் மின் நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநில அரசுகள் இந்த வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளன.