வங்கதேசத்தில் ஏற்பட்ட உள் நாட்டுக் கலவரம் காரணமாக இந்தியாவுடனான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத் தலைநகர் டாக்காவுக்கும் அகர்தலாவுக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகுரா பகுதியில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முற்றிலுமாக நின்றுபோயுள்ளது. இதேபோல வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய பகுதி களில் நடைபெறும் வர்த்தகம் கடந்த திங்கள்கிழமை முதல் நின்றுபோயுள்ளது. அரசியல் சூழல் காரணமாக வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் நிலைமை எப்போது சீரடையும் என்று தெரியவில்லை. இருப்பினும் வங்கதேசத்திலிருந்து சரக்குகளை ஏற்றிய சில லாரிகள் அங்குரா பகுதியில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகும். இக்கட்சி காலவறையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெற்ற சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதலாண்டில் இத்தகைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை முதல் நடைபெறும் போராட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். பல வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த அரசியல் போராட்டம் பரவியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி புறக்கணித்தது. அரசியல் கட்சியல்லாத ஒரு காபந்து அரசு உருவாக்கி புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பிஎன்பி வலியுறுத்தி வருகிறது.
இரு நாடுகளிடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலத்தில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிராந்தியத்தில் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இதனால் வேலையிழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் லாரி ஓட்டுநர்கள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு வட கிழக்கு மாநிலங்களுக்கு வருவதற்குத் தயங்குகின்றனர். திரிபுரா, மேகாலயம், அசாம், மிஜோரம் ஆகிய நான்கு வட கிழக்கு மாநிலங்களும் 1,880 கி.மீ. தூரத்துக்கு வங்கதேச எல்லையைச் சுற்றியுள்ளன.
டாக்கா-அகர்தலா இடையிலான பயணிகள் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு நான்கு நாள்கள் இந்த பஸ் சேவை இயக்கப்படும். இது முற்றிலுமாக நிறுத்தப்பட் டுள்ளதாக திரிபுரா பஸ் போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகுரா தரை வழி துறை முகமாகக் கருதப்படுகிறது. இது வங்கதேச தலைநகர் டாக்கா விலிருந்து 150 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது திரிபுரா தலைநகர் அகர்தலாவின் புறநகர் பகுதியின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தினசரி 200 லாரிகள் வங்கதேசத்திலிருந்து சரக்குகளை ஏற்றி இப்பகுதிக்கு வரும். இதனிடையே வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.