வணிகம்

பொருளாதார தேக்க நிலைக்கு யுபிஏ அரசே காரணம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகளே காரணம் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட தேக்க நிலைக்கு உள்நாட்டில் நிலவிய சூழலே காரணம். இதற்கு வெளிநாடுகளில் ஏற்பட்ட தேக்க நிலை காரணம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

காரணம் என்ன?

பொருளாதார தேக்க நிலைக்கு வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமையே காரணம் என இதுவரை மத்திய அரசு கூறிவந்த காரணங்கள் சரியல்ல என்பதற்கு ஆதாரமாக ஐஎம்எப் அறிக்கை அமைந்துள்ளது.

2012-ம் ஆண்டில் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார விஷயங்களுக்கு மத்திய அரசு தீர்வே காணவில்லை. இதனால் பொருளாதாரம் சரிவடைந்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை ஐஎம்எப் வெளி யிட்டுள்ளது. வளரும் பொருளாதார சந்தைகளில் தேக்க நிலைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வளர்ச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2012-ம் ஆண்டு வரையிலான நிலவரம் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. உள்நாட்டு காரணிகளுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுக் காரணிகளால் ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவு என்று கூறப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார நிலைமை இதில் ஆராயப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையை ஒட்டி இந்தியாவின் வளர்ச்சி குறைந்துவந்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதால் எட்டிய பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள இந்தியா தவறிவிட்டது. இந்த நிலை 2009-ம் ஆண்டு வரை நீடித்தது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

உள்நாட்டு காரணிகள்

இதேபோல வளர்ச்சியை பாதித்த உள்நாட்டு காரணிகள் மீண்டும் 2011-ல் தலை தூக்கியது. இதே நிலை 2012-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீடித்தது என்றும் ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்தது. இதற்கு சர்வதேச பொருளாதார தேக்க நிலை முக்கியக் காரணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ரஷியா மற்றும் தென்னாப்பிரிக் காவில் வெளிப்புற காரணிகள் வெகுவாக பாதித்தபோதிலும் இவ்விரு நாடுகளில் உள்நாட்டில் ஏற்பட்ட சூழலும் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக அமைந் ததாக ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. வெளியி லிருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருந்ததால், நிறுவனங் களின் முதலீடு குறைந்தது. மேலும் அதிகரித்த பணவீக்கம், குறைவான வளர்ச்சி ஆகியன முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்தது. இதனால் முதலீடுகளும் குறைந்தன. மேலும் விலைவாசி உயர்வால் வீடுகளில் நுகர்வு குறைந்து செலவும் மட்டுப்படுத்தப்பட்டது என்று ஐஎம்எப் குறிப்பிட்டுள்ளது.

நிபுணர்கள் கருத்து

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீத அளவுக்குக் குறைந்ததற்கு வெளிப்புற காரணிகள் மட்டும் காரணமல்ல. கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) குறைந்தே காணப்பட்டது. மேலும் ஏற்றுமதி குறைந்ததற்கு வெளிநாடுகளில் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் காரணம் என்று ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கியின் தெற்காசிய பிராந்திய தலைவர் சமிரான் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் 4.9 சதவீத வளர்ச்சியை எட்டுவதும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை ஏப்ரல் 8-ம் தேதி ஐஎம்எப் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிய வளர்ச்சி வங்கியானது 2014-15-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. முன்னர் 5.7 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.

நிதி நிலையில் ஸ்திரமற்ற தன்மை, முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சிரமம், கட்டமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்வதில் உள்ள சிரமம் ஆகியன பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. மேலும் ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வெனிசூலா ஆகிய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சீனாவுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெரும்பாலும் அமெரிக்காவை ஒட்டியே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT