ரொக்க கையிருப்பு விகிதத்தில்(சி.ஆர்.ஆர்) மாற்றம் கொண்டுவர ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. வங்கிகள் தங்களது டெபாசிட்களில் 4 சதவீதம் வரை ரொக்கமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
இந்த ரொக்க கையிருப்பு விகிதத்தில், 30 சதவீதம் வரை வங்கிகளில் இருக்கும் அந்நிய செலாவணி மற்றும் தங்கத்தை இருப்பாக வைக்க அனுமதிக்கலாம் என்று பேராசிரியர் எரல் டிசோசா பரிந்துரை செய்தார்.
ஆனால் ரிசர்வ் வங்கி இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தெரிகிறது. இப்போது ரொக்க கையிருப்பு விகிதம் உள் நாட்டு நாணயத்தில் வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை தங்கம் மற்றும் அந்நிய நாணயத்தில் வைத்திருக்கும் போது அதற்கு கூடுதல் செலவாகும்.
மேலும் தங்கம் மற்றும் மற்ற நாடுகளின் நாணய மதிப்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இவற்றின் மதிப்பு சரியும் போது (அந்நிய முதலீடு அதிகம் வந்து, வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயரும் பட்சத்தில்) கூடுதலாக அந்நிய நாடுகளின் நாணயத்தை வைக்க வேண்டி இருக்கும். அதனால் ரொக்க கையிருப்பு விகிதத்தில் தங்கம் மற்றும் அந்நிய நாணயங்களை சேர்க்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.