தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் 3,250 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. இது கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து சதவீதம் உயர்வாகும். அதேபோல கடந்த வருடம் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் உயர்வாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் 2,875 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டியது.
டிசம்பர் காலாண்டில் 13,796 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியது. கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதமும், கடந்த வருடம் இதே காலாண்டில் 5.9 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 13,026 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் 13,342 கோடி ரூபாய் வருமானமும், 3,096 கோடி ரூபாய் நிகர லாபமும் ஈட்டியது. நடப்பு நிதி ஆண்டில் 7 முதல் 9 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று இப்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. ஒரு பங்கு வருமானம் 28.44 ரூபாயாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீத உயர்வும், கடந்த வருடம் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 13 சதவீதமும் உயர்ந்திருக்கிறது.
பங்குச்சந்தை நிபுணர்கள் டிசம்பர் காலாண்டில் 3,153 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் வரும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை தாண்டி 3,250 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் வந்திருக்கிறது.
இந்த காலாண்டில் எங்களுக்கு சில புதிய விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எங்களுடைய புதிய உத்திக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்தார்.
பணியாளர் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நல்ல உறவு இருப்பதால்தான் முடிவுகள் இந்தளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டு முடிவுகள் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அனைத்து நாட்டு கரன்சிகளுக்கு நிகராக டாலர் மதிப்பு உயர்ந்ததே காரணம் என்று நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜிவ் பன்சால் தெரிவித்தார். மேலும், குறுகிய கால தேவைகள் மற்றும் நீண்ட கால தேவைகளுக்கு போதுமான முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டில் 59 புதிய வாடிக்கையாளார்களை நிறுவனம் இணைத்திருக்கிறது. மேலும் இந்த காலாண்டில் 13,154 பணியாளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1,69,638 ஆகும். இந்த காலாண்டில் 8900 பணியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
டிசம்பர் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 20.4 சதவீதமாக இருக்கிறது. எதிர்பார்ப்புகளை தாண்டி முடிவுகள் வந்திருப்பதால், வர்த்தகத்தின் முடிவில் 5.12 சதவீதம் உயர்ந்து 2,074 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.