வணிகம்

2017-ல் சுஸுகி ஆலை உற்பத்தியை தொடங்கும்: நிறுவனத் தலைவர் ஒஸாமு அறிவிப்பு

பிடிஐ

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் தங்களது ஆலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தியைத் தொடங்கும் என்று அந்நிறுவனத் தலைவர் ஒஸாமு சுஸுகி தெரிவித்தார்.

காந்திநகரில் நடைபெறும் "வைப்ரண்ட் குஜராத்" மாநாட்டில் பங்கேற்ற அவர், குஜராத் மாநிலத்தில் உருவாகிவரும் ஆலையில் ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை 2017-ல் உற்பத்தியை தொடங்கும் என்றார்.

குஜராத் மாநிலம் அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளில் மிகச் சிறப்பாகத் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டிய அவர், தொழில் தொடங்க ஏற்ற மாநிலமாகத் திகழ்வதால் அடுத்த ஆலை தொடங்க வேண்டும் என்ற உடனேயே குஜராத் மாநிலத்தைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார்.

சுஸுகி மோட்டார் கார்ப் பரேஷனின் புதிய ஆலை ஆமதாபாதில் உள்ள ஹன்ஸல்பூர் கிராமத்தில் அமைய உள்ளது. இந்த ஆலையில் ரூ. 4,000 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்களை தயாரிக்கும். இவை அனைத்தும் மாருதி நிறுவனத்துக்கு சப்ளை செய்யப்படும். 2012-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலத்தை குஜராத் மாநில அரசு ஒதுக்கியது.

இது முன்னர் இந்திய நிறுவனமான மாருதி சுஸுகி பெயரில் அமைக்க திட்ட மிடப்பட்டது. பின்னர் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் என்ற பெயரில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுஸுகி நிறுவனம் அமைக்கும் மூன்றாவது ஆலை இதுவாகும். ஹரியாணா மாநிலத்துக்கு வெளியே அமைக்கும் முதலாவது ஆலை இதுவாகும். ஏற்கெனவே குர்காவ்ன் மற்றும் மானேசரில் இந்நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன.

SCROLL FOR NEXT