உணவு பாதுகாப்பு பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இந்தியா மிகச் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று சர்வதேச வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) தலைவர் ராபர்டோ அஸ்வெடோ குறிப்பிட்டார்.
இந்திய தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: டபிள்யூடிஓ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தம் (டிஎப்ஏ) செய்து கொள்வதன் மூலம் பொருள்களின் விலை குறைந்து ஏற்றுமதி அதிகரிக்கும்.
உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு சுமுக தீர்வு காண வேண்டும். உணவு பாதுகாப்பு பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு டிசம்பர் வரை காலக்கெடு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் இந்தியா தனது மேலான ஆலோசனையை அளித்து தீர்வு காண உதவலாம் என்று அஸ்வெடோ குறிப்பிட்டார்.
2013-ம் ஆண்டு டிசம்பரில் பாலியில் நடைபெற்ற மாநாட்டில் வளரும் நாடுகள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்ததால் அந்த மாநாடு வெற்றி பெற்றது. உணவு பாதுகாப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை பாலி மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களே தொடரும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின்படி வளரும் நாடுகள் தங்களின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தை உணவு மானியமாக அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. டபிள்யூடிஓ ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் வர்த்தக செலவு 15 சதவீத அளவு குறையும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரமானது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். இது அர்த்தமுள்ள பிரச்சாரமாகத் தோன்றுகிறது.
இது உலகெங்கிலும் உள்ள மக்களைப் பெரிதும் கவருவதாக உள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் தொடங்க பலரும் முன்வருவர் என்று ராபர்டோ குறிப்பிட்டார். வர்த்தக தடைகளைத் தளர்த்தி சுமூகமான வர்த்தகத்துக்கு வழி வகுக்க அனைத்து நடவடிக்கைகளையும் டபிள்யூடிஓ எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வளர்ச்சியானது ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதனால் இங்குள்ள ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்று நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சர்வதேச சந்தையில் வளரும் நாடுகளின் வர்த்தக பங்களிப்பு அளவை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை டபிள்யூடிஓ எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தாராள வர்த்தகம் மட்டுமே சில பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்துவிடாது என்று அவர் சுட்டிக் காட்டினார். வர்த்தக ஒப்பந்தம் என்பது வளர்ச்
சிக்கானதாக இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயி ரமாவது ஆண்டு இலக்குகளில் ஒன்றுதான் வர்த்தகமும் மேம்பாடும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும் என்பதாகும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே கொண்டு அளவிட முடியாது. அது வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் அனைத்து சமுதாய மக்களது வாழ்க்கைத் தரமும் உயர்வதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வெறும் 20 சதவீதம்தான். இந்த வளர்ச்சியைக் கொண்டுதான் 80 சதவீதம் முதல் 84 சதவீத மக்களுக்கு உணவளிக்க வேண்டும். இந்த பொறுப்பு வளரும் மற்றும் மிகக் குறைந்த வளர்ச்சியை எட்டிய நாடுகள் (எல்டிசி) மீது உள்ளன. உலகின் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இத்தனை மக்களுக்கும் 3 சதவீதத்துக்கும் குறைவான வளர்ச்சியைக் கொண்டு உணவளிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.