இன்னும் 18 முதல் 30 மாதங்களில் ஐடி துறையின் சராசரி வளர்ச்சியை விட இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்தார். ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனத்தின் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“18 முதல் 30 மாதங்களுக்குள் ஐடி துறையின் சராசரி வளர்ச்சியை விட இன்போசிஸ் வளர்ச்சி உயரும். நாங்கள் ஏற்கெனவே ஓர் இலக்கினை நிர்ணயம் செய்திருக்கிறோம். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான நாராயண மூர்த்தி நிறுவனத்துக்கு மீண்டும் வரும் போது மூன்று வருடத்துக்கான இலக்கு நிர்ணயம் செய்தார். இந்த இலக்கு 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது பாதி காலம்தான் முடிவடைந்திருக்கிறது. மீதமுள்ள காலத்துக்குள் இலக்கினை எட்டுவோம்” என்று விஷால் சிக்கா தெரிவித்தார்.
எங்களிடம் 553 கோடி டாலர் பணம் இருக்கிறது. எங்களுக்கு கடன் கிடையாது. 82.7 சதவீத பணியாளர்கள் முழுமையான வேலைகளில் இருக்கிறார்கள். இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாதது. அதனால் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றார். கடந்த அக்டோபரில் 15 முதல் 18 சதவீத வளர்ச்சி என்பதை நீண்ட கால இலக்காக இன்போசிஸ் நிர்ணயம் செய்தது. வியாபாரத்தில் நாங்கள் செய்துவரும் மாற்றம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரியும் என்றார்.
மேலும் பிக்டேட்டா, ஆட்டோ மெஷன், ஆர்டிபிஷியல் இன்டெலி ஜென்ஸ் உள்ளிட்ட துறைகளில் புதுமைகளை கண்டறிய முதலீடு செய்திருக்கிறோம். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிரிவில் 11 அல்லது 12 திட்டங்கள் இருக் கின்றன. ஒட்டுமொத்தமாக 23,000 திட்டங்களில் இன்போசிஸ் வேலை செய்துவருகிறது என்றார்.
இந்த புதிய பிரிவுகள் வேகம் எடுக்க இன்னும் சில காலம் ஆகலாம் என்றார். ஐடி துறை சங்கமான நாஸ்காம் 2014-15 ஆண்டுகான ஐடி துறையின் வளர்ச்சி 13 முதல் 15 சதவீதம் இருக்கும் என்று கணித்திருக்கிறது. ஆனால் இன்போசிஸின் வளர்ச்சி 7 முதல் 9 சதவீத வளர்ச்சி (டாலர் மதிப்பில்) இருக்கும் என்று நிறுவனம் கணித்திருக்கிறது. ஆனால் ரூபாய் மதிப்பில் 5.6 முதல் 7.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது. இன்போசிஸ் நிறுவனர் அல்லாத ஒருவர் தலைவர் பதவியில் இருப்பது இதுதான் முதல் முறை.