வணிகம்

மார்ச்சில் ஒருங்கிணைந்த அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை

செய்திப்பிரிவு

அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஒருங்கிணைந்த கொள்கை மார்ச் மாதம் வெளியாகும் என வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக இதுவரையில் கொண்டுவரப்பட்ட மாற்றங் களையும், பிரிவுகளையும் ஒருங் கிணைக்கும் விதமாக இந்தக் கொள்கை இருக்கும் என்று மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (எப்ஐபிபி) தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கை 2015 என்கிற பெயரில் இந்த கொள்கை கொண்டுவரப்பட உள்ளது. மார்ச் 31-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த புதிய கொள்கை ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கையின் முகவராக இந்த அமைப்பு செயல்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை சார்ந்த முடிவுகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கிறது. முதலீட்டாளர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், முடிவுகளை ஒரே இடத்தில் எடுக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்படுகிறது.

அரசு துறை செய்திகளையும், ரிசர்வ் வங்கி செய்திகளையும் முதலீட்டாளர் அப்டேட் செய்து கொள்ள முடியாது. அரசாங்கம் ஆண்டுகாண்டு கொள்கைகளை மாற்றி வருகிறது. இதை இந்த அமைப்பு எளிதாக்குகிறது. இந்த புதிய கொள்கை குறித்து பொதுமக்கள் ஜனவரி 16 ஆம் தேதிவரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பல படிநிலைகளில் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. இந்த நடைமுறைகளை கடந்த ஆண்டு ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் காப்பீடு துறைகளில் தளர்த்தப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 26 சதவீத வளர்ச்சி கண்டு 1,734 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 13.82 பில்லியன் டாலராக இருந்தது.

SCROLL FOR NEXT