சிறுமுதலீட்டாளர் நலனுக்காக பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் அனைத்து நிறுவனர்களின் பான் எண்ணை பங்குச்சந்தையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை விரைவில் செபி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நிறுவனர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தடுக்க முடியும் என்று செபி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிறுவனர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்பதை விட, பான் எண் ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருக்கும் பட்சத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று அவர் தெரி வித்தார். இதன் மூலம் அவர்களின் பரிவர்த்தனைகளை எளிதில் கண்காணிக்க முடியும். வருமான வரி, கிரெடிட் கார்ட், டிடிஎஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான பரிவர்த்தனைகளையும் கண் காணிக்க முடியும்.
பான் எண்ணில் நான்காவது எழுத்தை வைத்து அது நிறுவனமா என்பது உள்ளிட்ட விவரங்களை பெற முடியும். நான்காவது எழுத்து பி-ஆக இருந்தல் அது தனிநபர், சி-ஆக இருந்தால் அது நிறுவனம், டி- ஆக இருந்தால் டிரஸ்ட், ஹெச்-ஆக இருந்தால் அது இந்து கூட்டு குடும்பம் என கண்டறியலாம். ஐந்தாவது எழுத்து பான் உரிமையாளரின் பெயரின் முதல் எழுத்து.