கூகுள் நிறுவனம் தனது நெக்ஸஸ் 6 ரக ஸ்மார்ட்போனை டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கும். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் நெக்ஸஸ் 6 ரக ஸ்மார்ட்போன் விலை ரூ. 43,999 ஆகும்.
கூகுள் நிறுவனம் நேற்று மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவை (ஜிஓஎஸ்எப்) தொடங்கியது. இம்மாதம் 12-ம் தேதி வரை இந்த திருவிழா நீடிக்கும். ஸ்மார்ட்போனுடன் குரோம்காஸ்ட் எனப்படும் டாங்கிளையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 2,999 ஆகும்.
ஆன்லைன் ஷாப்பிங் திரு விழாவில் லெனோவா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஹவுசிங், வான் ஹுசேன் தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படும்.
2012-ம் ஆண்டு முதலாவது ஷாப்பிங் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது 90 வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால் இம்முறை 450 வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கடந்த சில வாரங்களாக ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் போக்கு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஜிஓஎஸ்எப் இணையதளத்தில் இதுவரை 50 லட்சம் வாடிக்கையாளர்கள் தேடுதல் நடத்தியுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நெக்சஸ் 6 ஸ்மார்ட் போனை பிளிப்கார்ட் மூலம் வாங்கலாம். 32 ஜிபி நினைவகம் கொண்ட நெக்ஸஸ் விலை ரூ. 43,999 ஆகும். 64 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 48,999 ஆகும். குரோம்காஸ்ட் டாங்கிள் விற்பனைக்காக பார்தி ஏர்டெல் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனங்களோடு கூகுள் கைகோர்த்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த டாங்கிளை வாங்கினால் 3 மாதத்துக்கு 60 ஜிபி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களுக்கு இதே சலுகை உண்டு. அத்துடன் கட்டணமில்லாமல் ஆக்டிவேட் செய்யப்படும்.
ஆன்லைன் ஷாப்பிங்கை மேலும் அதிகரிப்பதற்காக இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. முன்னணி ஆன்லைன் நிறுவனங்களுடன் இணைந்து விற்பனை செய்யப்படுகிறது.