ஸ்கைப், வாட்ஸ்அப் மூலம் போன் பேசினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது பார்தி ஏர்டெல் நிறுவனம். இந்த அறிவிப்பை தற்போது திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்த கட்டணத்துக்கு எதிராக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஸ்கைப், வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்தி வாடிக் கையாளர்கள் போன் செய்தால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. குறிப்பாக 3ஜி நெட்வொர்க் மூலம் 10 கேபி பயன்படுத்தினால் 4பைசா எனவும், 2ஜி நெட்வொர்க் மூலம் 10 கேபி பயன்படுத்தினால் 10 பைசா என்றும் கட்டண விவரங்களை வெளியிட்டிருந்தது. மேலும் இதற்கான பிரத்யேக கட்டண விவரங்களை விரைவில் வெளியிட உள்ளோம் என்று ஏர்டெல் கூறியிருந்தது.
இந்த கட்டண விவரங்களை தீவிர ஆலோசனைகளுக்கு பிறகே அறிவித்தோம். மேலும் தொலை தொடர்பு சேவையின் கீழ்வரும் இது போன்ற சேவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயமும் என்றும் கூறியுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்கிற நோக்கம் நிறைவேற இதுபோன்ற மாற்றங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஏர்டெல் குறிப் பிட்டுள்ளது.