கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு வாராந்திர அளவில் பங்குச்சந்தைகள் சரிந்தன. இந்த சரிவு மேலும் தொடரக்கூடும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறாரகள்.
இன்று மொத்த விலை குறியீட்டு எண் வர இருக்கிறது மேலும் நடந்துவரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகளை பொறுத்து பங்குச்சந்தையின் செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தை, அந்நிய முதலீட்டாளர்கள், டாலருக்கு நிகரான ரூபாயின் ஏற்ற இறக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவை குறுகிய காலத்தில் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் அம்சங்கள் ஆகும்.
வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு தொழில் உற்பத்தி குறியீடு மற்றும் பணவீக்க தகவல்கள் வெளியானது. இதை சந்தை எப்படி பார்க்கிறது என்பதை பொறுத்து இன்றைய வர்த்தகத்தின் தொடக்கம் இருக்கும்.வரும் வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, இதனால் ஏற்ற இறக்க சந்தையில் வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று ரெலிகர் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஜெயந்த் மாங்லிக் தெரிவித்தார்.
சென்செக்ஸ் 27000 புள்ளிகளுக்கு கீழே செல்லும்பட்சத்தில் குறுகிய கால வர்த்தகர்கள் சந்தையை விட்டு விலகி இருப்பது நல்லது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு
கடந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிந்ததால் முக்கிய ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்தது. டிசிஎஸ், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது