பல கோடி ரூபாய் மோசடி சம்பந்தப்பட்ட சத்யம் நிறுவன வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை படிப்பதற்கு கால அவகாசம் தேவை. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை, ஆனால் தீர்ப்பு எழுதுவதற்கு முன்பு நான் திருப்தியடைய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த தீர்ப்பை எழுதுவதற்கே இரண்டு மூன்று வாரங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆறு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் 226 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. 3,000 பக்கத்துக்கு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராம ராஜூ மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வாட்ல மணி ஸ்ரீனிவாஸ் மற்றும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் ஆனார்கள்.
மேலும் இந்த வழக்கில் தணிக்கை நிறுவனமான பிடபிள்யூசியின் தணிக்கையாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கணக்குகளை திருத்தி எழுதியதாக ஒப்புக்கொண்டார். இந்தியாவில் நடந்த மிகப்பெரிய தணிக்கை குற்றம் இதுவாகும். அதன் பிறகு இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டது. இந்த மோசடியால் சிறுமுதலீட்டாளர்களுக்கு 14,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.