அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த முதலீட்டுத் தொகை 1,735 கோடி டாலர் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்தியில் பாஜக தலைமை யிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பொருளாதார சூழல் மாறி, முதலீட்டுக்கான சூழல் உருவாகி வருகிறது. இதனால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார். கடந்த ஆண்டு (2012-13) இதே காலத்தில் அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 1,382 கோடி டாலர்தான் நேரடி அந்நிய முதலீடாக இருந்தது.
உற்பத்தித் துறையில் வளர்ச் சியை அதிகரிப்பது இன்னமும் சவாலாக உள்ளதாக அவர் மேலும் கூறினார். உற்பத்தித் துறையில் இந்தியாவை சர்வதேச மையமாக மாற்றுவதில் சில இடர்பாடுகள் உள்ளன. அந்த இடர்பாடுகள் என்னென்ன என்று கண்டறிந்துள்ளோம். அவற்றைப் போக்குவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
`மேக் இன் இந்தியா’ குறித்த ஒரு நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் மேலும் கூறியது: உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு கட்டமைப்பு அவசியம் என்பதை அரசு உணர்ந்துள்ளது. மேக் இன் இந்தியா- கொள்கை வலுப்பெற தொழில்முனைவோர் அதிகம் உருவாக வேண்டும்.
அரசு துரிதமாக செயல்பட வசதியாக தகவல் தொழில்நுட்ப வசதியை பின்பற்றி விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் இத்துறையில் நிலவும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
தொழில்துறையினருக்கு உடனுக்குடன் அனுமதி அளிப் பதற்காக வர்த்தக இணைய தளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைச் செயலர் அஜித் சேத் கூறினார். இந்த இணையதளத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசின் 8 துறைகள் இதில் சேர்க்கப்பட உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.இக்கருத்தரங்கில் ரசாயனம், பெட்ரோ ரசாயனம், எண்ணெய் மற்றும் எரிவாயு, முதன்மை பொருள்கள், பார்மசூடிகல்ஸ் குறித்து விவாதிக்கப்படுகிறது.