இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப் பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்க உள்ளதாக தெரிகிறது. அரசு உயரதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில் ஐரோப்பிய யூனியன் முடிவை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் இந்திய மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்தன. அதன்படி மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நான்கு காய்களுக்கான இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடை செய்தன.
சமீபத்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உணவு மற்றும் கால்நடை ஆய்வு குழு அதிகாரிகள் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏற்றுமதி செய்யப்படும் தரம், உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கான தடை நீக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததாக இந்திய ஏற்றுமதி ஆய்வு கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறினார்..
முன்னதாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் ஐரோப்பிய ஆய்வு குழுவிடம் ஏற்றுமதிக்கான சான்றிதழ் வாங்கும் நடை முறைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள அமைச்சர் ’ இந்தியா ஏற்கனவே ஏற்றுமதி கொள்கைகளில் பல தரக்கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.
தர பரிசோதனை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு என ஏற்றுமதிக்கு பல அளவு கோல்களை கொண்டுள்ளது, என்றாலும் ஐரோப்பிய நாடுகளின் சான்றிதழ் வாங்குவது பாதுகாப்பான ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து 2013 ஆம் ஆண்டில் 3,933 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.5,022 கோடி.. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 3,559 கோடி மதிப்புக்கு 3,890 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.