அமெரிக்காவின் சில்லறை சங்கிலித் தொடர் விற்பனை நிறுவனமான வால்மார்ட் ஆக்ராவில் ஒரு விற்பனையகத்தைத் திறந்துள்ளது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்நிறுவனம் ஒரு விற்பனையகத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2012-ம்ஆண்டு போபாலில் வால்மார்ட் விற்பனையகம் தொடங்கப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக அரசு தெளிவான கொள்கையை வகுக்காத நிலையில் வால்மார்ட் நிறுவனம் மொத்த விற்பனை யகங்களைத் தொடங்கி வருகிறது. பல பிராண்ட் விற்பனை செய்வது தொடர்பாக இன்னமும் தெளிவான கொள்கை வகுக்கப்படவில்லை. வால்மார்ட் நிறுவனம் இப்போது 9 மாநிலங்களில் 20 விற்பனையகங்களை செயல் படுத்தி வருகிறது. `கேஷ் அண்ட் கேரி’ - என்ற பெயரில் இந்த விற்பனையகங்கள் செயல்படுகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் 50 விற்பனையகங்களைத் தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது என்பதை அந்நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. அடுத்த ஆண்டிலிருந்து ஆன்லைன் மூலமான விற்பனையையும் மேற்கொள்ள இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிசினஸ் டு பிசினஸ் என்ற அடிப்படையில் இ-காமர்ஸ் மூலமான விற்பனையை இந்நிறுவனம் லக்னோ, ஹைதராபாத், குண்டூர், விஜயவாடா ஆகிய நகரங்களில் மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக பார்தி நிறுவனத்துடன் வைத்திருந்த கூட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முறித்துக் கொண்டது.