பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகள் பங்குவிலக்கல் நடவடிக்கை மூலம் நேற்று விற்பனைக்கு வந்தது. வர்த்தகம் தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே எதிர்பார்க்கப்பட்டதற்குமேல் ஒன்றரை மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பங்கு விற்பனை மூலம் திரட்ட திட்டமிட்டிருந்த ரூ. 1,500 கோடி இந்த விற்பனை மூலம் நிச்சயம் கிடைக்கும் என தெரிகிறது.
மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவை அனைத்தும் தனி நபர் சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 சதவீத தள்ளுபடி விலையில் இவற்றை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் விற்பனை மூலம் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மொத்தம் 30 கோடி பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பங்குகள் ஒதுக்கீடு கோரி பிற்பகல் 3.30 மணி வரை பங்குச் சந்தைகளில் கேட்புகள் வந்த வண்ணமிருந்தன.
நடப்பு நிதியாண்டில், மோடி தலைமையிலான அரசின் முதல் பங்கு விலக்கல் நடவடிக்கை இது. மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்த முடிவில் செயில் நிறுவனப் பங்குகள் ரூ.83.35 என்கிற விலையில் வர்த்தகமாகியுள்ளது.
இந்த விலையிலிருந்து 2.75 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 83 என்கிற விலையில் விற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 சதவீத பங்கு விற்பனை என்பது 20.65 கோடி பங்குகளைக் கொண்டது. இதில் 10 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஒதுக்கப்படுகிறது. 25 சதவீத பங்குகள் பரஸ்பர நிதியம் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் 10.82 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு 2012ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. மார்ச் 2013ல் இதன் 5.82 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கம் மேற்கொள்ளப்படும் முதல் நிறுவனம் செயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தில் அரசு வசம் 80 சதவீத பங்குகள் உள்ளன. இந்த விற்பனைக்குப் பிறகு அரசிடம் 75 சதவீத பங்குகள் இருக்கும்.