வணிகம்

மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்: 2016 ஏப்ரலில் அமல்படுத்த திட்டம்

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு தொடர்பான இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி-யை 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறையால் எந்த மாநில அரசுக்கும் ஒரு ரூபாய் கூட வருவாய் இழப்பு ஏற்படாது, இது மாநில அரசுக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் ஆதாயம் அளிக்கும் வரி விதிப்பு முறையாக இருக்கும் என்று மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்த நிதியமமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்த மசோதா நிறைவேற வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். அதற்குப் பிறகு மொத்தம் உள்ள மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில சட்டப் பேரவை இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசுகள் நிறைவேற்றுவதற்காக தனியான சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வரும். இந்த சட்ட திருத்தத்தை மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும்.

வரி விதிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. இதே நிலைதான் மாநில அரசுகளுக்கும். இப்புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டால் அது மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் அதிகாரம் அளிப்பதாக இருக்கும். இதன்படி இது நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும். ஒவ்வொரு சரக்கு போக்குவரத்துக்கும் வரி விதிப்பதற்கு இது வகை செய்யும். அதேபோல சேவைகளுக்கும் வரி விதிக்க இப்புதிய மசோதா வழிவகுக்கும்.

இப்புதிய முறை அமலுக்கு வந்தால் தற்போது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு மறைமுக வரிவிதிப்பு முறைகள் முடிவுக்கு வரும். இதன் மூலம் சரக்கு மற்றும் சேவைக்கு ஒருமுகமான வரி விதிக்கப்படும்.

புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி முறையில் சரக்குகள் மீதான அனைத்து பரிவர்த்தனை மற்றும் சேவைக்கு வரி விதிக்கப்படும். இவற்றிலிருந்து சில பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இதே வரி விதிப்பு முறையைத் தொடர்வதா அல்லது பட்டியலில் சிலவற்றை நீக்குவதா என்பது குறித்து ஆராயப்படும். மதுபானத்துக்கு ஜிஎஸ்டி-யில் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புகையிலை சார்ந்த பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகின்றன.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு மத்திய அரசு அளித்து ஈடு செய்யும். மாநில அரசுகளின் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு ரூ. 11 ஆயிரம் கோடி அளிக்கப்படும் என நிதி அமைச்சர் ஜேட்லி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

அடுத்த கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா விவாதம்

மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் இது குறித்த விவாதம் அடுத்த கூட்டத்தொடரில் நடைபெறும் என்று ஜேட்லி கூறினார். அனைத்து மாநில அரசுகளின் நலனும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இது குறித்து அடுத்த கூட்டத் தொடரில் விவாதம் நடத்தி நிறைவேற்றலாம் என்று மாநிலங்களவையில் இது குறித்து பேசும்போது ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT