காப்பீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாததால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் வேலையில் காப்பீடு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த நிப்பான் லைப் நிறுவனம் 26 சதவீதம் முதலீடு செய்துள்ளது. இதனை 49 சதவீதமாக அதிகரிக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது.
நிப்பான் லைப் நிறுவனத்துடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை ஏற்கெனவே முடிந்துவிட்டதாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் கோஷ் தெரிவித்தார். எங்களது முதலீட்டாளர்கள் காப்பீடு மசோதா விஷயத்தில் தெளிவு ஏற்பட காத்திருந்தார்கள். இதற்கான அவசர சட்டம் பிறப் பிக்கப்பட்டவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாக அவர் தெரிவித்தார். நிப்பான் லைப் தங்களது முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க தயாராக இருக்கிறது என்றார்.
மேலும், ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தில் 49 சத வீதம் வரை முதலீடு செய்ய சரியான நிறுவனத்தை தேடி வருவதாகவும் சாம் கோஷ் தெரிவித்தார். ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவ னத்தில் ஒரு பிரிவாக இயங்கிவரும் ஹெல்த் இன்ஷூரன்ஸை தனி நிறுவனமாக பிரித்து, அதிலும் 49 சதவீத முதலீடு செய்ய சரியான நிறுவனத்தை தேடி வருவதாகவும் கூறினார். இதற்காக சில நிறுவனங்களுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த ஜெனரல் இன்ஷூ ரன்ஸ் வருமானத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரிவின் மூலமாக மட்டும் 25 சதவீத வருமானம் கிடைக்கிறது. அதனால் நீண்ட கால நோக்கில் வளர்ச்சி அதிகமாக இருப்பதாவும் அதனால் இந்த நிறுவனம் தனியாக பிரிக்கப்படுவதாகவும் கோஷ் தெரிவித்தார்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறை யின் தற்போதைய மதிப்பு 20,000 கோடி ரூபாயாகும், இந்த துறையில் ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஒட்டு மொத்த ஜெனரல் இன்ஷூரன்ஸ் துறையின் மதிப்பு 78,000 கோடி ரூபாயாகும். வருங்காலத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் துறைக்கு கிட்டத்தட்ட சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் ஜெனரல் இன்ஷூரன்ஸ் துறையும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் துறையும் தனித் தனியாகத்தான் செயல்படுகின்றன. நிப்பான் லைப் முதலீடு பற்றி கோஷ் கூறும் போது, அவர்களின் முதலீடு பகுதி பகுதியாக ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தில் அதிகரிக்கும் என்றார்.
அவசர சட்டத்துக்குப்பதிலாக, பாராளுமன்றத்தில் மசோதா நிறை வேற்றப்படும் வரை காத்திருப்பீர்களா என்று கேட்டத்தற்கு, எங்களது வேலைகளை தொடங்க இந்த அவசர சட்டமே போதும் என்றார். 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிலையன்ஸ் லைப் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை ரூ.3,062 கோடி கொடுத்து நிப்பான் லைப் நிறுவனம் வாங்கியது.