இந்தியாவில் விற்பனையைத் தொடங்க ஒற்றை இலச்சினை (சிங்கிள் பிராண்ட்) வர்த்தக நிறுவனங்கள் எனப்படும் 6 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரி சீலித்து வருகிறது. இத்தகவலை மக்களவையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தன்வே தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று எழுத்து மூலமாக அளித்த விளக்கத்தில் அவர் கூறியது: 2012 ஜனவரி மாதம் ஒற்றை பிராண்ட் கொண்ட நிறுவனங்கள் 100 சதவீதம் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் 17 கோடி டாலர் மதிப்பிலான 18 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இப்போது 6 நிறுவனங்கள் ஒற்றை பிராண்ட் விற்பனையைத் தொடங்க விண்ணப்பித்துள்ளன. இது அரசின் பரிசீலனையில் உள்ளது. தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைக்கேற்ப இந்த விண்ணப்பங்களை பரி சீலித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதி்ப்பது குறித்து அரசு இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
சர்க்கரை ஆலை சீரமைப்பு: அரசிடம் திட்டம் இல்லை
நலிவடைந்த சர்க்கரை ஆலைகளை சீரமைப்பது தொடர்பாக அரசிடம் திட்டம் ஏதும் கிடையாது என்று அமைச்சர் ராவ் சாகிப் பாட்டீல் கூறினார். நலிவடைந்த நிறுவனங்களை மீண்டும் இயக்குவது குறித்து தனியார் நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கென தனியாக நிதித் தொகுப்பு எதையும் உருவாக்கி ஒதுக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அரசிடம் உள்ள தகவலின்படி 189 ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 513 ஆலைகள் இயங்கி வரு வதாகவும் அவர் கூறினார். சர்க்கரை விலையை தீர்மானிப்பது தொடர்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு இன்னமும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு
அமெரிக்க மத்திய வங்கி கட்டுப்பாடுகளைத் தளர்த்திய போதிலும் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூ. 1.84 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளாக மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். 2013-14-ம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ. 51,649 கோடி முதலீடு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதிகரித்துவரும் அந்நியச் செலாவணி ரொக்கக் கையிருப்பு, குறைவான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் குறைந்து வருவது ஆகியன நல்ல அறிகுறிகளாகும். இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவன முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றார்.
சாரதா நிறுவன மோசடி:. 2,394 கோடி மீட்க வேண்டியுள்ளது
மக்களிடம் மோசடி செய்து ஏமாற்றிய சாரதா நிறுவனத்திடமிருந்து ரூ. 2,394 கோடி தொகையை மீட்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும் முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தில் டெபாசிட் செய்த தொகை என்று மாநிலங்களவையில் ஜெயந்த் சின்ஹா கூறினார். மொத்தம் ரூ. 2,459 கோடியை இந்நிறுவனம் திரட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.