வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஷியா மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தலைமையிலான ஈரான் அரசுக்கு எதிராக கடந்த டிசம்பர் முதல் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஈரான் அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் பகிரங்கமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இப்போது ரஷ்யா, சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துகள், நகைகள், எலெக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்டவை ஈரானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரானில் இருந்து உலர் பழங்கள், ரசாயனங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகிறது.
பாசுமதி அரிசி.. இந்தியாவில் இருந்து ஈரானுக்கு ஆண்டுதோறும் 12 லட்சம் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்படி சுமார் ரூ.12,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஈரானில் சபஹார் துறை முகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், சபஹார் துறைமுகத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உள்ளது. இது வரும் ஏப்ரலில் நிறைவடைகிறது. எனவே, சபஹார் துறைமுகம் மீதும் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்கா இப்போது இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு மேலும் குழப்பமான சூழலை உருவாக்கி உள்ளது.