இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதத்தில் பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் வெளிநாடுகளில் கடன் பத்திர வெளியீடு மூலம் நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளன.
இது கடந்த நிதிஆண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் அதிகபட்சமாக 560 கோடி டாலர் வரை திரண்டுள்ளது.
கடந்த ஆண்டு நிறுவனங்கள் திரட்டிய தொகை 1,600 கோடி டாலராகும்.இது 2012-ம் ஆண்டு திரட்டியதைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். கடந்த வாரம் பாரத ஸ்டேட் வங்கி 125 கோடி டாலரைத் திரட்டியது. ஆயில் இந்தியா நிறுவனம் கடன் பத்திர வெளியீடு மூலம் 100 கோடி டாலரைத் திரட்டியது.
முதலீட்டு வங்கிகள் வெளிநாடு களில் நிதி திரட்டி தங்களது முதலீடுகளை அதிகரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 200 கோடி டாலரைத் திரட்ட உத்ததேசித்துள்ளது.
இவை தவிர ஓவிஎல், ஐஎப்சிஎல் ஆகிய நிறுவனங்களும் சேர்ந்து 600 கோடி டாலர் வரை திரட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை தவிர பவர் ஃபைனான்ஸ் 70 கோடி டாலரையும், கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம் 100 கோடி டாலரையும் ஐஎப்சிஎல் 150 கோடி டாலரையும் திரட்ட உள்ளன.
ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் விரைவிலேயே 50 கோடி டாலர் முதல் 70 கோடி டாலர் வரை கடன் திரட்ட உத்தேசித்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் பத்திர வெளியீட்டை 2013, மே 24-ல் இருந்து நிறுத்தி வைத்திருந்தன.
இந்தியாவை விட அமெரிக்காவில் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் பத்திர வெளியீடு மூலம் நிதி திரட்டுவதில் இந்திய நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.