ஜப்பானின் சுமிடோமோ மிட்சுயி டிரஸ்ட் வங்கி (Sumitomo Mitsui Trust Bank ) ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் முதல் கட்ட முதலீடாக 2.77 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது. முதல் கட்டமாக ரூ. 371 கோடி முதலீடு செய்திருக்கிறது எஸ்.எம்.டி. வங்கி.
ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து வங்கி தொடங்க ரிலையன்ஸ் கேபிடல் முனைந்து வருவதாக இரு நிறுவனங்களும் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கின்றன. 1.8 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை வைத்திருக்கிறது ஜப்பானின் எஸ்.எம்.டி. வங்கி.
எங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சியில் எஸ்.எம்.டி வங்கி முக்கிய பங்கு வகிக்கும் என்று ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். மேலும், அனைந்து விதங்களிலும் நீண்ட கால வளர்ச்சியில் பங்கேற்கும். தற்போதைய வர்த்தகத்திலும் அவர்களின் உதவி இருக்கும் என்று அனில் அம்பானி தெரிவித்தார்.
ரிலையன்ஸ் கேபிடல் ஜப்பான் நிறுவனத்துடன் இணைவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு நிப்பான் லைப் நிறுவனத்துடன் இணைந்தது. அந்த நிறுவனம் லைப் இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
முன்னுரிமை பங்குகள் மூலம் இந்த முதலீட்டை எஸ்.எம்.டி. வங்கி செய்திருக்கிறது. முதலீட்டு காலம் ஒரு வருடமாகும். தற்போது வர்த்தகமாகும் விலையை விட சில சதவீதம் பிரீமியம் கொடுத்து எஸ்.எம்.டி. வங்கி முதலீடு செய்திருக்கிறது. புதன் கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் கேபிடல் பங்கு விலை 497 ரூபாயில் முடிவடைந்தது.
எஸ்.எம்.டி. வங்கி ரிலையன்ஸ் குழுமத்தின் மற்ற பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு நிதிச்சேவைகள் மற்றும் ஆசியா பசிபிக் பிராந்தி யத்தில் இதர சேவைகளையும் செய்யும்.