கடனுக்கான வட்டிக் குறைப்பு அறிவிப்பு எதையும் ரிசர்வ் வங்கி நேற்று தனது நிதிக் கொள்கையில் வெளியிடவில்லை. இது பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை 115 புள்ளிகள் சரிந்து 28444 என்ற நிலையைத் தொட்டது.
காலையில் வர்த்தகம் மிக மந்த நிலையில் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 28386 புள்ளிகள் வரை சரிந்தது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வட்டிக் குறைப்பு இருக்கும் என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பதிலால் குறியீட்டெண் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகம் முடிவில் முன்தினத்தைவிட 115 புள்ளிகள் சரிந்தது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 31 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 8504 ஆக இருந்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ. 2.25 உயர்த்துவதாகவும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 1 உயர்த்துவதாகவும் அரசு அறிவித்தது.
இந்த உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்வதாக அறிவித்ததால் விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இருப்பினும் பெட்ரோலிய பொருள் சார்ந்த நிறுவனப் பங்குகள் விற்கும் போக்கு அதிகமாக இருந்தது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ. 61.87 என்ற அளவுக்கு ஸ்திரமடைந்ததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையாயின.
முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் கெயில் பங்கு 2.85 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 2.47 சதவீதமும், ஹெச்டிஎப்சி 1.51 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.48 சதவீதமும் சரிந்தன. உலோக நிறுவனப் பங்குகளில் அதிகபட்சமாக ஹிண்டால்கோ 2.51 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.76 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 1.12 சதவீதமும், ஸ்டெர்லைட் 1.10 சதவீதமும் உயர்ந்தன.
மொத்தம் 1,508 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,419 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. 127 நிறுவனப் பங்குகள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மொத்த வர்த்தகம் ரூ. 3,332 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.