நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை நவம்பர் மாதத்தில் 76 சதவீதம் அதிகரித்து 1,686 டாலரைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பற்றாக்குறை 957 கோடி டாலராக இருந்தது. மாதத்துக்கு மாதம் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பற்றாக்குறை 1,335 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் பற்றாக்குறை 10,061 கோடி டாலராக அதிகரித் துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 9,689 கோடி டாலராக இருந்தது. நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி 7.27 சதவீதம் அதிகரித்து 2,596 கோடி டாலராக இருந்தது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் ஏற்றுமதி 2,420 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில் ஏற்றுமதி 5.02 சதவீதம் அதிகரித்து 21,575 கோடி டாலரைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது 20,536 கோடி டாலராக இருந்தது. நாட்டின் இறக்குமதி நவம்பர் மாதத்தில் 26 சதவீதம் அதிகரித்து 4,282 கோடி டாலரைத் தொட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி 3,337 கோடி டாலராக இருந்தது.
நவம்பர் மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 1,171 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டில் இறக்குமதியானதைக் காட்டிலும் 9.7 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,297 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக இறக்குமதி செலவு குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எண்ணெய் அல்லாத பிற பொருள்களின் இறக்குமதி நவம்பர் மாதத்தில் 49 சதவீதம் அதிகரித்து 3,110 டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,079 கோடி டாலர் அளவுக்கு பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.