வணிகம்

பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது: பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

பிடிஐ

பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்காகவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மேலும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று புதுடெல்லியில் அசோசேம் விழாவில் மத்திய அமைச்சர் கூறினார்.

கடந்த மூன்று வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு இரண்டாவது முறையாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நிதி தேவைக்காக உற்பத்தி வரியை உயர்த்தினாலும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றார் மத்திய அமைச்சர்.

பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 2.25 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ஒரு ரூபாயும் மத்திய அரசு உயர்த்தியது. ஆனால் இந்த விலையேற்றத்தை தற்காலிகமாக எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால் சில்லரை விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இரண்டாவது முறையாக உற்பத்தி வரி அதிகரிப்பு மூலம் அடுத்த நான்கு மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவதை சாதகமாக்கி பணவீக்கம் உயராமல் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வேலையை மத்திய அரசு செய்திருக்கிறது.

சர்வதேச அளவில் இனிமேலும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் பலன் நிச்சயமாக மக்களுக்கு கொண்டுசெல்லப்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பேற்றபோது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 107 டாலராக இருந்தது. ஆனால், அதன் பிறகு உயர்ந்து 115-117 டாலர் அளவுக்கு உயர்ந்தது. இப்போது சரிந்து 70 டாலர் என்ற நிலையில் இருக்கிறது. இந்த சரிவை பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 7 முறை பெட்ரோல் விலையை குறைத்திருக்கிறோம் மூன்று முறை டீசல் விலையை குறைத்திருக்கிறோம் என்று பிரதான் கூறினார்.

இந்த சரிவின் மூலம் பெட்ரோல் விலை கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்கு சரிந்திருக்கிறது.

மேலும் மத்திய அரசு பிஸினஸ் செய்வதற்கான சூழ்நிலையை எளிதாக்கி, உற்பத்தி துறையை ஊக்குவித்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT