தொடர்ந்து வரும் அரசியல் குறுக்கீடுகள் காரணமாக காப்பீடு மசோதா நிறைவேறுவதைத் தடுக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பிக்கியின் 87வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசும்போது இதை தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அரசியல் இடையூறு தொடர்வதால் காப்பீடு மற்றும் நிலக்கரி மசோதா இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. தடைகள் இருந்தாலும் காப்பீடு மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்தார் அருண் ஜேட்லி.
நடப்பு குளிர்கால கூட்டத் தொடர் முடிய இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் மனநிலையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. காப்பீடுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயரை குறிப்பிடாமல், ஒரு கட்சி சிட் பண்ட் மோசடி வழக்கில் சிக்கிஇருக்கிறது. அந்த கட்சியின் உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், அதிலிருந்து கவனத்தை திசை திருப்ப மாநிலங்களவையை முடக்குவதில் கவனம் செலுத்து கிறார்கள் என்றார்.
நிலக்கரி மசோதா பற்றி குறிப்பிடும்போது, இந்த மசோதா தொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்து சந்தேகங்களும் தீர்க்கப்பட்டு மக்களவையில் நிறைவேறியது, ஆனாலும் மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது என்றார்.
நீண்ட காலமாக கிடப்பில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பிறகு, காப்பீடு மசோதாவை பற்றி ஜேட்லி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.