வணிகம்

உலக வர்த்தக ஒப்பந்த அமலாக்கத்துக்கு தடையாக இருந்த உணவு மானிய ஒதுக்கீடு விஷயத்தில் உடன்பாடு

பிடிஐ

உலக வர்த்தக ஒப்பந்தத்தை (டபிள்யூடிஓ) நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்த உணவு மானிய ஒதுக்கீடு விஷயத்தில் இந்திய அமெரிக்கா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கையிருப்பில் உபரியாக உள்ள உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்குவது தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே நீடித்து வந்த பிரச்சினையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவி வந்த இழுபறி நிலை நீங்கும். அத்துடன் உறுப்பு நாடுகளுக்கிடையிலான தடையற்ற வர்த்தகத்துக்கு வகை செய்யும் வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (டிஎப்ஏ) நடைமுறைப்படுத்துவதற்கான வழியும் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் புரோமேன் வாஷிங்டனில் கூறும்போது, “இந்தோனேசியாவின் பாலி தீவில் உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான மாநாடு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில், உணவுப் பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வளரும் நாடுகள் சார்பில் வைக்கப்பட்டது. நீண்ட காலமாக நீடித்த இந்த பிரச்சினையில் இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.

இவ்விரு நாடுகளின் இந்தத் திட்டம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பொதுக் கவுன்சில் வரும் டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் மறு ஆய்வு செய்யும். டபிள்யூடிஓ அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு நாடு, தனது ஒட்டுமொத்த உணவுப்பொருள் உற்பத்தி மதிப்பில் அதிகபட்சமாக 10 சதவீதம் மட்டுமே மானியமாக வழங்க வேண்டும் என இப்போதுள்ள விதிமுறை கூறுகிறது.இதை மீறினால அபராதம் விதிக்கப்படும்.

எனினும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இந்த விதிமுறையில் திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. இதற்கு வளர்ந்த நாடுகள் ஒப்புக் கொள்ள மறுத்து வருகின்றன.

இதற்கிடையே, வளரும் நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும் ஒரு பிரிவு (பீஸ் கிளாஸ்) இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. இதன்படி மானியம் 10 சதவீதத்தைத் தாண்டினாலும் அபராதம் விதிக்கப்படமாட்டாது. இந்த விலக்கை வரும் 2017-ம் ஆண்டு வரை நீட்டிக்க பாலி மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இது விஷயத்தில் நிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை காலவரையறையின்றி விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை வைத்தன. இதற்கு அமெரிக்கா இப்போது ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT