இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா தெரிவித்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக அலிபாபா திகழ்கிறது. இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களில் (ஸ்டார்ட் அப்) முதலீடு செய்ய உள்ளதாக ஜாக் மா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அலிபாபா நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு 2,500 கோடி டாலரை திரட்டியது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மிக அதிக தொகையை பொதுப் பங்கு வெளியீடு மூலம் திரட்டியது இதுவே முதல் முறையாகும்.
இந்நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்திய தொழில் முனைவோருடன் இணைந்து அதிக தொழில்களில் ஈடுபடுவதோடு அதிக அளவில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக ஜாக் மா தெரிவித்தார். இந்தியாவில் உள்ள தொழில் முனைவோர், தொழில்நுட்பவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகளிடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை பாராட்டிய அவர், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கு இதுவே உரிய தருணம் என்றார். பிரதமர் மோடியின் உரையை தான் கேட்டிருப்பதாகவும், அது தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய சாதனைகளைப் புரிய முடியும் என்றார்.
இந்தியாவை மொபைல்போன் நிறைந்த நாடு என்று குறிப்பிட்ட ஜாக் மா, இந்த நாட்டில்தான் சீனா இணைந்து செயலாற்ற முடியும் என்றார். இரு நாடுகளின் தொழில்முனைவோருக்கு இது மிகச் சிறந்த சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டார்.
தங்களது இணையதளத்தின் மூலம் பல்வேறு இந்திய வர்த்தகர்கள் தொழில் புரிவதாக குறிப்பிட்ட அவர், இந்திய சாக்லெட்டுகள், தேயிலை மற்றும் வாசனைப் பொருள்களை 4 லட்சம் சீனர்கள் வாங்குவதாகக் குறிப்பிட்டார். சீனாவுக்கு மேலும் அதிக பொருள்களை இந்தியர்கள் விற்பதற்கு வாய்ப்புள்ளாகவும் அவர் கூறினார்.
சர்வதேச அளவில் சிறிய நிறுவனங்களுடன் இணைந்து அலிபாபா பணியாற்றுவதாகக் குறிப்பிட்டார். சிறிய, குறு நிறுவனங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்வதே தங்களது இலக்கு என்றார். இத்தகைய இலக்கை எட்டுவதற்கு இந்திய நிறுவனங்கள் தங்கள் நிறுவன சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
அதிக அளவிலான தொழில் வாய்ப்புகளை இணையதளம் கொண்டுள்ளது. இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளனர். அத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராக இருந்த தன்னை இணையதளம் தொழிலதிபராக மாற்றிவிட்டதாகக் கூறினார். இதேபோன்று இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரது வாழ்க்கையும் இணையதளம் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
1999-ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா இன்று சீனாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.