சீனாவில் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அலிபாபா செவ்வாய்க்கிழமை நடத்திய ஒரு நாள் ஷாப்பிங் சலுகை விற்பனையில் 9,300 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் விற்பனையாகியுள்ளன.
சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பையும் மீறி அதிக அளவுக்கு பொருள்களை விற்பனை செய்து வர்த்தகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்நிறுவனம். ஆண்டுதோறும் நவம்பர் 11-ம் தேதியன்று மகத்தான தள்ளுபடியில் பொருள்களை விற்பனை செய்வதை இந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 580 கோடி டாலர் அளவுக்கு பொருள்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் கடந்து அதிக அளவுக்கு பொருள்கள் விற்பனையாகியுள்ளது குறிப் பிடத்தக்கது. மொத்தம் 27.80 கோடி பேர் இந்த விற்பனையில் பொருள்கள் ஆர்டர் செய்துள்ளனர். இவர்களில் 43 சதவீதம் பேர் மொபைல்போன் மற்றும் அது சார்ந்த பொருள்கள் வாங்குவதற்கு பணம் செலுத்தியவர்களாவர்.
கடந்த ஆண்டு இந்நிறுவனம் நடத்திய விற்பனையில் 15 கோடி பேர் பங்கேற்று பொருள்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் வர்த்தகத்தில் 27,000 வர்த்தக நிறுவனங்கள் 220 நாடுகளில் தங்களுடைய தயாரிப்புகளை அலிபாபா ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்பனை செய்யதுள்ளன. சமீபத்தில்தான் இந்நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிட்டது.
ஸ்நாப்டீல் விற்பனை
இந்தியாவில் குர்காவ்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல், செவ்வாய்க்கிழமை இதேபோன்று சலுகை விற்பனையை அறிவித்தது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இந்நிறுவன விற்பனை தொடங்கியது. செல்போன், ஆயத்தஆடைகள், நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக அளவில் தள்ளுபடி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தின் இணையதளம் விரைவிலேயே முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாயினர்.