வணிகம்

பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி

பிடிஐ

தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச் சந்தையில் மிகப் பெரும் எழுச்சி ஏற்பட்டது. பங்குச் சந்தையில் 255 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 28693 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தை 94 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 8588 புள்ளிகளானது.

பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி டிசம்பர் 2—ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிதிக் கொள்கையில் வட்டிக் குறைப்பு நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை முன்னெப்போதைக் காட்டிலும் குறைவாக இருந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் புளூசிப் மற்றும் நடுத்தர ரக நிறுவனப் பங்குகளை அதிகம் வாங்கின. கடந்த 3 நாள்களில் பங்குச் சந்தையில் 355 புள்ளிகள் உயர்ந்துள்ளன. முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுஸுகி, கோல் இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ, ஹீரோமோட்டோகார்ப், என்டிபிசி, ஹிண்டால்கோ, ஹெச்டிஎப்சி, விப்ரோ, ஐடிசி நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தொடர்ந்து இதே அளவு உற்பத்தி செய்வதென்ற முடிவு செய்ததும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாகும்.

ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் நிதிக் கொள்கை அறிவிக்க உள்ள நிலையில் வங்கி்ப் பங்குளும் அதிக அளவில் ஏற்றம் பெற்றன. இதில் எஸ்பிஐ பங்கு விலை அதிகபட்சமாக 5 சதவீதம் உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.

ரூ. 100 லட்சம் கோடி

முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு முதல் முறையாக ரூ. 100 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வர்த்தக இறுதியில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ. 98,81,550 கோடியாக இருந்தது. முன்தினம் இது ரூ. 87,550 கோடியாக இருந்தது.

பங்குச் சந்தையில் மொத்தம் 1,509 பங்குகள் ஏற்றம் பெற்றன. 1,518 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. மொத்த வர்த்தகம் ரூ. 3,834 கோடியாகும்.

SCROLL FOR NEXT