வணிகம்

ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி, ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு கட்டணம் இல்லை: எஸ்பிஐ வங்கி அறிவிப்பு

பிடிஐ

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் ஃபேங்க் ஆப் இந்தியா, இம்மாதம் முதல் தேதியில் இருந்து இணையதளம், மொபைல்  பேங்கிங் வழியாக செய்யப்படும் என்இஎப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

குறைந்த பணப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமீபத்தில் இதுபோன்ற சேவைக்கட்டணங்களை வங்கிகள் வசூலிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததது. இதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளது எஸ்பிஐ வங்கி.

மொபைல் மூலம் ஐஎம்பிஎஸ்(IMPS) பரிவர்த்தனைக்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கட்டணம் இல்லை எனவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

என்இஎப்டி சேவை மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரையிலும், ஆர்டிஜிஎஸ் வழியாகச் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரையிலும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்த கட்டணம் வசூலிக்கப்படாது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் " டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியாக, இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் வழியாகச் செய்யப்படும் ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி ஆகியவற்றுக்கு சேவைக்கட்டணம் இம்மாதம் 1-ம் தேதியில் இருந்து வசூலிக்கப்படாது.

மேலும், ஐஎன்பி( INB), எம்பி(MB), யோனோ(YONO) ஆகியவற்றுக்கான ஐஎம்பிஎஸ் கட்டணமும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT