வணிகம்

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: சவரனுக்கு ரூ.304 குறைந்தது

செய்திப்பிரிவு

டெல்லியில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.270 குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இப்போது மிக அதிக அளவு தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்துவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனால் தங்கத்தின் விலை குறைந்தது. தொடர்ந்து மூன்றாம் நாளாக வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.820 குறைந்து ரூ.35,380 என்ற விலையில் விற்பனையானது.

சென்னையில்..

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் சனிக்கிழமை ரூ.2,419 என்ற விலையில் விற்பனையானது. முன்தினம் ஒரு கிராம் விலை ரூ.2,457 என்றிருந்தது. ஒரு கிராமுக்கு ரூ.38-ம் ஒரு சவரனுக்கு ரூ. 304-ம் குறைந்து விற்பனையானது. நவம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை இந்த அளவுக்கு இப்போதுதான் வெகுவாகக் குறைந்துள்ளது.

தங்கம் மீது 80:20 என்ற விதிமுறையை மத்திய அரசு இதுவரை விதித்திருந்தது. தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விதி கொண்டுவரப்பட்டது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பில் 20 சதவீதம் கட்டாயம் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த விதிமுறையை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த விதிமுறையை ரிசர்வ் வங்கி நீக்கியதால் தங்க வரத்து அதிகரிக்கும். அதேசமயம் கடத்தல் மூலமாக தங்கம் வருவது குறையும் என்று வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அடுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று அகில இந்திய சரஃபா சங்கத்தின் துணைத் தலைவர் சுரீந்தர் குமார் ஜெயின் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாட்டால் நகைத்தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள் கிடைப்பதில் இருந்துவந்த சிக்கல் இனி நீங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக தங்க கவுன்சில் வரவேற்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திடீரென தங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை நீக்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் என்று உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஆச்சர்யமாக இருந் தாலும், இது மக்கள் மத்தியிலும் நகைத் தொழிலில் உள்ளவர்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று கூறினார். உண்மையிலேயே தங்க நகை ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கட்டுப்பாடு தளர்வு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT