வணிகம்

தொழில் ரகசியம்: அதிகமாக சிந்திக்கத் தூண்டும் வருங்கால பின்னறிவு

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

நி

னைத்தது நடக்காமல் போனால் ஒழிந்துபோகிறதென்று ஒதுக்கிவிடலாம். திட்டமிட்டது நடக்காமல் தோல்வியடைந்தால் தலையெழுத்து என்று விட்டுவிடலாம். அடைந்த தோல்வியைத் துறந்து, விழுந்த குழியிலிருந்து எழுந்து, வாங்கிய வசவைக் கூட மறந்துவிடலாம். ஆனால் தோல்விக்கு காரணம் கேவலம் ஒரு சின்ன தவறு என்று தெரியும் போது, பைசா பெறாத காரணத்துக்கு என்று புரியும் போது, சுலபமாகத் தவிர்த்திருக்கலாம் என்று அறியும் போது வலிக்கிறது. `சே எப்படி தோனாம போச்சு’, ‘கண்ணு முன்னால இருந்ததை எப்படி கவனிக்காம விட்டோம்’ என்று வயிறெரிகிறது.

நடந்தபின் தெரியும் பின்னறிவை ஆங்கிலத்தில் Hindsight என்பார்கள். ஒரு விஷயம் நடந்த பின் அதன் காரணம் தெரிகிறது. முன்னேயே தெரிந்திருந்தால் சரியாய் செய்து தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்பது பின்னறிவு. போஸ்ட் மார்ட்டம் (Post mortem) செய்து இறந்த காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இறக்கப் போவதன் காரணத்தை முன்பே அறிந்துகொண்டு இறப்பை தவிர்க்க முடியுமா?

ப்ரீமார்ட்டம்’ (Premortem) செய்தால் முடியும் என்கிறார் ‘கேரி க்ளைன்’ என்ற ஆராய்ச்சி உளவியலாளர். இவர் கூறுவது புரிவதற்கு 1989ல் நடந்த ஆய்வு ஒன்றை விளக்குவது அவசியமாகிறது. ஆய்வை செய்தவர்கள் ‘டெபரா மிஷல்’, ‘எட்வர்ட் ரஸ்ஸோ’ மற்றும் ‘நான்சி பெனிங்டன்’ என்ற பேராசிரியர்கள். நடந்து முடியாத செயலை முடிந்து விட்டது என்று கற்பனை செய்து அதெப்படி முடிந்திருக்கும் என்ன நடந்திருக்கும், என்ன காரணங்களால் அப்படி நடந்திருக்கும் என்று முன்கூட்டியே அனுமானிக்கும் போது சரியான காரணங்களை தெரிந்துகொள்ளும் சாத்தியக்கூறு முப்பது சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடித்தனர். திட்டமிடும் விஷயம் முடிந்துவிட்டது என்று பாவித்து என்ன நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும், எதனால் நடந்திருக்கும் என்று கண்டறிவதை ‘வருங்கால பின்னறிவு’ (Prospective hindsight) என்றனர். ஆய்வு முடிவுகளை ‘Journal of Behavioural Decision Making’ல் கட்டுரையாக எழுதினர். கட்டுரையின் அழகான தலைப்பு ‘Back to the future’ - மீண்டும் வருங்காலத்திற்கு!

(நான் அமெரிக்காவில் எம்பிஏ படிக்கையில் இந்த டெபரா மிஷல் தான் என் Consumer Behaviour வகுப்பு பேராசிரியர் என்பதில் எனக்கு இன்றும் அலாதி பெருமிதம்!)

வருங்கால பின்னறிவை அடிப்படையாக வைத்து கேரி க்ளைன் கூறிய கோட்பாடு தான் ப்ரீமார்ட்டம். போஸ்ட் மார்ட்டம் செய்து இறந்த காரணம் தெரியும் போது இறந்தவர் குடும்பம், டாக்டர், போலீஸ் என்று அனைவருக்கும் பயன் உண்டு. இறந்தவரைத் தவிர! தொழில் சார்ந்த சூழ்நிலையில் ஒரு புராஜெக்ட்டை ஆரம்பிக்கும் முன் ப்ரீமார்ட்டம் செய்யும் போது சரியாக அனுமானித்து அது சரியாக செய்யப்பட்டு தோல்வியடைந்து போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டிய நிலை வராமல் தடுக்கிறது.

தோல்வியடையும் புராஜெக்ட் ரெவ்யூ மீட்டிங்கில் பெரும்பாலும் ‘என்ன நடந்து தொலைத்தது, ஏன் ஃபெயிலியர்’ என்று தான் கேட்கப்படுகிறது. ஆனால் ப்ரீமார்ட்டம் என்பது டாக்டரிடம் ‘பேஷண்ட் போய்விட்டார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். என்ன ஆனது, எப்படி இறந்தார் என்று கூறுங்கள்’ என்று கூறுவது போல. அதே போல் புராஜெக்ட் துவங்குமுன் ஊழியர்களிடம் `இப்பொழுது நாம் வருங்காலத்தில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். இந்த புராஜெக்ட் தோல்வியில் முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். எதனால் தோல்வியடைந்தது என்று கூறுங்கள்’ எனும் போது புராஜெக்ட் தோல்வியில் முடிய நேரிடும் காரணங்கள் முன்பே தெரியும்.

வியாபாரத்தில் புராஜெக்ட்டுகள் தோல்வியில் முடிவது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் புராஜெக்டுகளை திட்டமிடும் குழுவிலுள்ள அனைவரும் தங்கள் சந்தேகங்கள், நம்பிக்கையின்மைகளை அனைவரிடமும் கூற தயங்குகின்றனர். திட்டமிடுதலில் உள்ள தவறுகளை கூறினால் தங்களை கடிந்துகொள்வார்களோ என்று தயங்கி கூறாமல் விட்டுவிடுகின்றனர். திட்டமிடும் போதே அனைவரையும் ஃப்ரீயாக மனம் திறந்து பேச வைத்தால் மட்டுமே புராஜெக்டுகள் பிழைக்க முடியும். இதற்குத் உதவுகிறது ப்ரீமார்ட்டம். திட்டமிட்டு முடித்த பின் புராஜெக்ட் தலைவர் தன் அணியினரிடம் ‘நாம் நினைத்தபடி நடக்காமல் தோல்வியில் முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள். எதனால் தோல்வியடைந்திருக்கும், எங்கு தவறுகள் நடந்தன என்பதை ஒரு பேப்பரில் எழுதுங்கள்’ என்று கூறவேண்டும். இப்படி கூறும்போது அணியினரும் திட்டமிடும் போது தங்கள் மனதில் தவறென்று நினைத்து அதை கூறத் தயங்கிய விஷயங்களை தயங்காமல் எழுதுவார்கள்.

திட்டமிட்டு நடந்து புராஜெக்ட் தோல்வியடைந்து எல்லாரிடமும் திட்டு வாங்கி போஸ்ட் மார்ட்டம் செய்யப்படுவதை விட திட்டமிடும் போதே அதிலுள்ள தவறுகளை கண்டுபிடித்து தெளிவாய் திட்டமிட்டு திறனாக புராஜெக்ட்டுகள் நிறைவேற்ற உதவும் கோட்பாடு தான் ப்ரீமார்ட்டம்.

பின்னறிவு நல்ல விஷயம் தான். ஆனால் வருங்கால பின்னறிவு இன்னமும் பெட்டர் இல்லையா? உங்களிடம் ஒரு கேள்வி. ஐந்து வருடங்களில் உங்கள் பிராண்ட் தமிழகத்தில் நம்பர் ஒன்னாக வருவதற்கான சாத்தியக்கூறு என்ன? எந்த காரணங்களால் அப்படி நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? இப்படி கேட்கும் போது உங்களால் ஒரு பாணியில் விடையளிக்க முடியும். இதே கேள்வியை சற்றே மாற்றிக் கேட்கிறேன். நாம் இப்பொழுது ஐந்து வருடங்கள் கழித்து அந்த வருங்காலத்தில் இருக்கிறோம். ஒரு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. உங்கள் பிராண்ட் தமிழகத்தில் நம்பர் ஒன் நிலையை அடைந்திருக்கிறது. எந்த காரணங்களால் இது நடந்தது என்று கூறுங்கள்.

இரண்டு கேள்வியும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டாவது கேள்விக்கு விடை கூற உணர்வு பூர்வமாய் சிந்திக்கவேண்டியிருக்கும் என்பதை கவனித்தீர்களா. வருங்கால பின்னறிவோடும் சிந்திக்க வேண்டியிருப்பதாலும் வருங்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து பதில் கூறவேண்டியிருப்பதாலும் என்ன நடந்திருக்கும் என்று காரணங்களை கண்டுபிடிப்பது எளிதாகிறது.

டெபரா மிஷல் செய்த ஆய்வில் இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. கம்பெனியில் புதிதாய் சேர்ந்த ஒரு ஊழியரின் பணிகள் விவரமாக கூறப்பட்டு அவர் ஆறு மாதத்தில் தன் வேலையை ராஜினாமா செய்கிறார். என்ன காரணங்களுக்காக அவர் வேலை விடுகிறார் என்று கூறுங்கள் என்று கேட்கப்பட்டது. கேட்கப்பட்டவர்கள் சராசரியாக 3.5 காரணங்கள் கூறினர். அதே கேள்வி இன்னொரு குழுவினரிடம் வருங்கால பின்னறிவு ஸ்டைலில் கேட்கப்பட்டது. ஆறு மாதம் கழிந்துவிட்டது, நாம் வருங்காலத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த ஊழியர் ஏன் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் என்று கூறுங்கள். இப்படி கேட்கப்பட்டவர்கள் சராசரியாக 4.4 காரணங்களை கூறினர். இவர்கள் பதில்கள் முந்தைய குழுவினரை விட ஏற்புடையதாக, தெளிவாக இருந்தன!

வருங்கால பின்னறிவு நம்மை ஆழமாக, அதிகமாக சிந்திக்கத் தூண்டுகிறது. நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கு இடையே உள்ள இடைவெளியை தெளிவாக நிரப்புகிறது. வருங்காலத்தை கணிக்கும் கடின வேலையை விட வருங்காலத்திற்கே சென்று கடந்து வந்த காலம் எப்படி இருந்திருக்கும் என்று கணிக்கும் பணி எளிமையானது மட்டுமல்ல, வலிமையானதும் கூட! தத்துவார்த்த அறிவுரை ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இறந்த பின் உங்கள் கல்லறையில் என்ன எழுதப்பட்டிருக்கும், சுற்றியுள்ளவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று எப்பொழுதும் நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையும் பிறருக்கு பயனுள்ளதாக அமையும் என்பார்கள்.

வாழ்க்கையின் முடிவில் உங்கள் கல்லறையில் எழுதப்பட விரும்பும் வாக்கியம் போல் வாழ ஆசைப்பட்டாலும் சரி, வியாபாரத்தில் தெளிவாக திட்டமிட்டு சரியாக செயல்பட்டு வெற்றி பெற விரும்பினாலும் சரி, நீங்கள் செய்யவேண்டிய காரியம் ப்ரீமார்ட்டம்!

satheeshkrishnamurthy@gmail.com

SCROLL FOR NEXT