வணிகம்

குஜராத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் நிதி அமைச்சர் சவுரபாய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ‘தொழிலதிபர்கள் சந்திப்பு மாநாடு’ நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை அழைக்கும் வகையில் சென்னையில் நேற்று கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் குஜராத் மாநில நிதித்துறை அமைச்சர் சவுரபாய் பட்டேல் பேசியதாவது:

பெட்ரோலியத்துக்கு அடுத்து எலக்ட்ரானிக் பொருட்களை நாம் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம். இத்துறையில் கவனம் செலுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய தொழில்கொள்கைகளை வெளியிடவுள்ளோம். குறிப்பிட்ட சில துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் தொழில் தொடங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க வரி சலுகைகள், மானியம் சலுகை அளிக்கவுள்ளோம்.

உபரி மின்சாரம்

குஜராத் மாநிலத்தில் மொத்த மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட் தான். ஆனால், தேவையை விட, எங்களிடம் அதிகமாகவே மின்சாரம் இருக்கிறது. இருப்பினும், இந்த உபரி மின்சாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வர போதிய அளவில் மின்கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் குஜராத்தில் இருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் தொடங்கிவைக்கிறார்

குஜராத்தில் ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ‘தொழிலதிபர்கள் சந்திப்பு மாநாடு’ நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஜப்பான், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களும் பங்கேற்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருக்கு அழைப்பு

தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை குஜராத் மாநில நிதி அமைச்சர் சவுரபாய் பட்டேல் மரியாதை நிமித்தமாக நேற்று மதியம் நேரில் சந்தித்தார். குஜராத்தில் நடக்கவுள்ள தொழிலதிபர்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தார்.

SCROLL FOR NEXT