வணிகம்

எஸ்ஏடி தீர்ப்பு எதிரொலி: டிஎல்எப் பங்கு 6% உயர்வு

செய்திப்பிரிவு

பங்கு பரிவர்த்தனை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (எஸ்ஏடி) அளித்த தீர்ப்பின் விளைவாக டிஎல்எப் நிறுவன பங்கு விலைகள் 6 சதவீத அளவுக்கு உயர்ந்தன.

டிஎல்எப் நிறுவனர் உள்ளிட்ட 6 பேர் பங்கு வர்த்தகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஈடுபட செபி தடை விதித்தது. இதை எதிர்த்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் டிஎல்எப் மனு செய்தது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்தது ஒருபுறம் என்றாலும் தங்களது பரஸ்பர நிதியை விற்பனை செய்து ரூ. 1,806 கோடி திரட்ட அனுமதிக்க வேண்டும் என்று டிஎல்எப் மனு செய்தது.

மூலதன தேவைகளை நிறைவேற்ற இந்தத் தொகை அவசியம் என நிறுவனம் குறிப்பிட்டிருந்தது இதை விசாரித்த தீர்ப்பாயம், பரஸ்பர நிதி விற்பனை செய்ய அனுமதி அளித்தது. இதனால் வர்த்தகத்தின் இடையே 6.59 சதவீதம் வரை உயர்ந்த இந்நிறுவனப் பங்குகள் வர்த்தகம் முடிவில் 6.24 சதவீதம் உயர்ந்து ரூ. 134.55 என்று விற்பனையானது. இதன் மூலம் இந்நிறுவன சந்தை மதிப்பு ரூ. 1,407.83 கோடி உயர்ந்து ரூ. 23,975 கோடியானது.

நவம்பர் மாதத்தில் ரூ. 767 கோடியும், டிசம்பரில் ரூ. 1,039 கோடியும் பரஸ்பர நிதி விற்பனை மூலம் திரட்ட தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையில் சரிவு

வாரத்தின் இறுதி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தை 47 புள்ளிகள் சரிவுடன் முடிவ டைந்தது. வர்த்தகம் முடிவில் குறியீட்டெண் 27868 புள்ளிகளாக இருந்தது. இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 1 புள்ளி சரிந்து 8337 புள்ளியில் முடிவடைந்தது.

ரியால்டி குறியீடும் ஹெல்த்கேர் குறியிடும் அதிகமாக உயர்ந்தன. அதேபோல மெட்டல் குறியீடு அதிகமாக சரிந்தது. புதன் கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,031 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய சந்தையில் முதலீடு செய்தார்கள்.

SCROLL FOR NEXT