சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே அடிப்படை என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆய்வில் மேலும் கூறியிருப்பதாவது: இதுவரை சர்வதேச வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சி முக்கியமானதாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி முக்கியமானதாக இருக்கும். அதே சமயத்தில் சர்வதேச அளவிலான மந்த நிலை தொடர்ந்து இருக்கும். 2025-ம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா மற்றும் உகாண்டா இருக்கும். வளர்ந்த நாடுகள் எட்டும் வளர்ச்சியை விட வளர்ச்சியடையும் நாடுகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். புதிய வளர்ச்சி மையங்களாக கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்கள் உருவாகின்றன. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் வளர்ச்சி முன்னிலையில் இருக்கும்.
சர்வதேச மந்த நிலைக்கு பிறகு சீனாவின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்துவருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இருந்த வளர்ச்சி தற்போது குறையத்தொடங்கி இருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அடுத்த பத்தாண்டுகளில் சீனாவின் வளர்ச்சி 4.4 சதவீதம் அளவிலேயே இருக்கும். சர்வதேச வளர்ச்சிக்கும் சற்று உயர்வாக இருக்கும்.
எண்ணெய் வளர்ச்சியை மட்டுமே சில நாடுகள் நம்பி இருந்த நாடுகள் சரிவை சந்தித்தன. ஆனால் இந்தியா, இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகள் புதிய தொழில்களில் கவனம் செலுத்தின.
இதன் காரணமாக வரும் காலத்தில் இந்த நாடுகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். உகாண்டாவும் அதிக வளர்ச்சியடையும் 10 நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. இதற்கு அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணமாகும். ஆண்டுக்கு 4.5 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தாலும், வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என ஹார்வர்டுபல்கலைக்கழக ஆய்வ தெரிவிக்கிறது.