வணிகம்

சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு பிறகு இன்று கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில்

செய்திப்பிரிவு

சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் என இது கருதப்படுகிறது.

புதிய முறை அமல்படுத்திய பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் இன்று கூட இருக்கிறது.ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, அதன் சாதக பாதகங்களை குறித்து இந்த கவுன்சில் விவாதிக்க இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக கூடியது. இன்று நடக்க இருக்கும் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 19-வது கூட்டமாகும்.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஜிஎஸ்டி குறித்து விவாதித்தனர். ஆனால் இன்று வீடியோ கான்பிரன்ஸ் முறையில் விவாதம் நடைபெற இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 30-ம் தேதி நடைபெற்றது. அப்போது அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் இருக்கும் சூழல் குறித்து விவாதிக்க முன்கூட்டியே கவுன்சில் கூட்டம் நடக்க இருக்கிறது.

தொழில் துறையினருக்கு எழுந்த பல சந்தேகங்களை மத்திய நிதி அமைச்சகம் விளக்க வந்தது. தவிர வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா ஆன்லைன் மூலம் ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வந்தார்.

24ம் தேதி முதல் ஜிஎஸ்டிஎன்

தொழில் நிறுவனங்கள் பொருட்கள் வாங்கியது மற்றும் விற்றதற்கான ரசீதுகளை வரும் 24-ம் தேதி முதல் ஜிஎஸ்டிஎன் தளத்தில் பதிவேற்றலாம் என ஜிஎஸ்டிஎன் தலைவர் நவீன் குமார் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 24-ம் தேதி முதல் ஜிஎஸ்டிஎன் தளம் செயல்படத் தொடங்கும். நிறுவனங்கள் தினசரி, வாரம் ஒருமுறை என விருப்பத்துக்கு ஏற்ப தாக்கல் செய்யலாம். இந்த தளத்தை எப்படி பயன்படுத்துவது தொடர்பாக வீடியோ உள்ளது. நிறுவனங்களுக்கு இது உதவியாக இருக்கும். தவிர வேறு கேள்விகள் இருக்கும் பட்சத்தில் பிரத்யேக கால்சென்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி வரி, வாட் வரி அமைப்பில் இருந்த 69 லட்சம் நிறுவனங்கள் ஜிஎஸ்டியில் பதிவு செய்திருக்கின்றன. தவிர புதிதாக 5 லட்சம் பதிவுகள் நடந்திருக்கின்றன என்று நவீன் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT