மற்ற மொபைல் சேவை உருவாக்கிய பாதையில் இலவசமாகச் சவாரி செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சந்தையில் ஏகபோகத்தை உருவாக்குகிறது என்று ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
மிகக்குறைவான இண்டர் கனெக்ஷன் பயன்பாடு கட்டணத்தினால் காலாண்டுக்கு ரூ.550 கோடி தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ரிலையன்ஸ் ஜியோ இப்படியாகக் கட்டணங்களைக் கையாண்டால் சந்தையில் போட்டி என்பதையே கெடுத்து விடும்” என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி ரவி காந்தி தெரிவித்துள்ளார்.
பில் அண்ட் கீப் முறையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கும் மற்ற மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனையடுத்து முன்னணி மொபைல் சேவை நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை இண்டர் கனெக்ஷன் பயன்பாட்டுக் கட்டணத்தை தற்போது இருக்கும் 14 காசிலிருந்து 30-35 பைசாவாக அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றன.
“பில் அண்ட் கீப் முறைக்கு மாறுவதற்கான கோரிக்கையினால் ரிலையன்ஸ் ஜியோ தனது செலவுகளை பிற ஆபரேட்டர்கள் தலையில் கட்டப்பார்க்கிறது. நடப்பு உத்தேசங்களின் படி இந்தத் துறைக்கு ஆண்டொன்றுக்கு ரூ.15,000-20,000 கோடி வரை செலவாகக் கூடியது. இதனால் ரிலையன்ஸ் தனது சேவைக்கான கட்டணத்தை பிற சேவைகளை வேட்டையாடும் நோக்கத்துடன் செயல்படுத்த அனுமதிக்கும், பிற நிறுவனங்களை அழித்து சந்தையில் ஏகபோக உரிமையை ஏற்படுத்திக் கொள்ளும்” என்று ஏர்டெல் சாடியுள்ளது.
மேலும், “ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து வெளியாகும் சுனாமி அளவுக்கான அழைப்புகளால் ஏர்டெல் நிமிடத்துக்கு 21 காசுகளை இழக்கிறது. இதனால் காலாண்டு ஒன்றிற்கு எங்களுக்கு மட்டுமே ரூ.550 கோடி இழப்பு ஏற்படுகிறது” என்று கூறுகிறது ஏர்டெல்