சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 'சென்ட் ஹோம் டபுள் பிளஸ்', 'ஆஸ்பயர் டெபாசிட்' என்ற பெயரில் இரு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்ட்ரல் வங்கி சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவின்போது இரு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. 'சென்ட் ஹோம் டபுள் பிளஸ்' என்ற முதல் திட்டத்தின்படி வீட்டுக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய இஎம்ஐ தொகையை விட கூடுதலாக வங்கியில் செலுத்தலாம். கூடுத லாக செலுத்திய தொகையை அவசர செலவுக்கு தேவைப்படும் போது திரும்ப எடுத்துக்கொள் ளலாம். கூடுதல் தொகையை செலுத்துவதால் குறிப்பிட்ட கடன் காலத்துக்கு முன்பாகவே விரைவாக கடனை அடைத்துவிட முடியும். இதனால் குறைந்த வட்டியே செலுத்த வேண்டிவரும். முன்கூட்டியே கடனை கட்டி முடிப்பதற்கு அபராதம் எதுவும் கிடையாது.
இதுமட்டுமின்றி வீட்டுக் கடனின் மீது ஓவர் டிராப்ட் வசதியும் கிடைக்கும். அதாவது வீட்டுக் கடன் வாங்கியவர் வீட்டை பழுது நீக்க, புதுப்பிக்க, விரிவுபடுத்த, ஃபர்னீச்சர்களை வாங்க, கார்-மோட்டார் சைக்கிள் வாங்க, சூரிய மின் உற்பத்தி கருவிகளை அமைக்க, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.
மற்றொரு திட்டமான 'ஆஸ் பயர் டெபாசிட்' திட்டத்தில் வாடிக்கையாளர் செலுத்தும் கால வைப்புத் தொகைக்கு வட்டி கிடைக்கும். அதே சமயத்தில் இந்த வாடிக்கையாளர்கள் பிரீமியம் கிரெடிட் கார்டை எந்தவித வருமான அத்தாட்சியும் காட்டாம லேயே பெற முடியும். இந்த கார்டை பயன்படுத்தி வாங்கும் கடனை வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்த 55 நாட்கள் கால அவகாசம் கிடைக்கும். மேலும் செலுத்த வேண்டிய தொகைக்கு 1.2 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். இந்த கிரெடிட் கார்டை வழங்குவதற்கான கட்டணம், ஆண்டு கட்டணம் ஆகியவை கிடையாது.