ஐந்து முறைகளுக்கு மேலும் ஏடிஎம்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து சில வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களில், பணம் எடுப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதற்காக ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்மை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ரூ.20 கட்டணம் வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் அனுமதி அளித்துள்ளது. இது கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதேநேரம், வங்கிகள் விரும்பினால் 5 முறைக்கு மேலும் இலவசமாக ஏடிஎம்மை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் எத்தனை முறை ஏடிஎம்மில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான முறையான அறிவிப்பை முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை இதுவரை வெளியிடவில்லை.
வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு வருவது அதிகரிக்கும் என்பதால், ஏடிஎம் பயன்பாட்டுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்க வங்கிகள் தயங்குவதாகக் கூறப்படுகிறது. பணம் எடுப்பதற்காக வங்கிக் கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்தால், அதற்கான செலவு ரூ.20 ரூபாயைவிட அதிகரிக்கும் என ஒரு வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே, 5 முறைக்கு மேலும் இலவசமாக ஏடிஎம்களை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து சில வங்கிகள் பரிசீலித்து வருவதாக தனியார் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மற்ற வங்கியின் ஏ.டி.எம்.களை மாதத்துக்கு ஐந்து முறை பயன்படுத்தலாம். இப்போது இந்த எண்ணிக்கை மூன்று முறையாக குறைக்கப்பட்டுள்ளது.