வணிகம்

நிறுவனங்களை கையகப்படுத்தல்: ஒரே வாரத்தில் ரூ. 27 ஆயிரம் கோடி பரிவர்த்தனை

பிடிஐ

சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்குவது, பெரிய நிறுவனங்களோடு இணைப்பது என்பது வழக்கமாக நடைபெறும் பணிகள்தான். ஆனால் கடந்த வாரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

ஒரு வாரத்தில் 6 நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 27,1563 கோடி கைமாறியுள்ளது. ஒரு வாரத்தில் அதிகபட்சம் 5 பரிவர்த்தனைகளே இதுவரை நடந்துள்ளன. இப்போது 6 பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது இதுவே முதல் முறையாகும். கடந்த 3 ஆண்டுகளாக மிகப்பெரும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை. சந்தை நிலவரம் அதற்கு சாதகமாக இல்லாததும் ஒரு காரணமாகும்.

கோடக் மஹிந்திரா வங்கி மிகப்பெரும் கையகப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை ரூ. 15,033 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைதான் மிகப் பெரிய தொகையாகும்.

இதற்கு அடுத்தபடியாக ஜேஎஸ்டபிள்யூ பவர் நிறுவனம் 2 நீர்மின் நிலையங்களை வாங்கியுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 9,700 கோடிக்கு நீர் மின்நிலையங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மொத்தம் 2,170 கோடி டாலர் மதிப்பிலான கையகப்படுத்தல் அல்லது இணைப்பு நட வடிக்கைகள் இந்தியாவில் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும்.

கடந்த வியாழக்கிழமை டெக் மஹிந்திரா நிறுவனம் ரூ. 1,500 கோடிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான லைட்பிரிட்ஜ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அன்றைய தினமே எவர்ஸ்டோன் கேபிடல் மற்றும் சோல்மார்க் நிறுவனம், செர்வியான் குளோபல் நிறுவனத்தை ரூ. 403 கோடிக்குக் கையகப்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கிஷோர் பியானிக்குச் சொந்தமான பியூச்சர் குழும நிறுவனம் சென்னையைச் சேர்ந்த நீல்கிரிஸ் சங்கிலித் தொடர் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. ரூ. 300 கோடிக்கு இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் மாலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த பைப்ஸ் அண்ட் பிட்டிங்ஸ் நிறுவனம் மற்றொரு நிறுவனமான ரெஸினோவா செமி நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை ரூ. 213 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT