வணிகம்

95 கோடி டாலருக்கு ஸ்நாப்டீலை வாங்குகிறது பிளிப்கார்ட்

செய்திப்பிரிவு

ஸ்நாப்டீல் நிறுவனத்தை 90 கோடி டாலர் முதல் 95 கோடி டாலர் வரை கொடுத்து பிளிப்கார்ட் வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்நாப்டீல் மற்றும் யுனிகாமர்ஸ் ஆகியவற்றை பிளிப்கார்ட் வாங்க முடிவெடுத்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஸ்நாப்டீல் நிறுவனம் யுனிகாமர்ஸ் என்னும் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த நிறுவனத்தையும் பிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

பிளிப்கார்ட் வழங்க ஒப்புக்கொண்ட தொகையை ஸ்நாப்டீல் இயக்குநர் குழு பரிசீலனை செய்யும் என்றும் பெரும்பாலும் இந்த தொகைக்கு இயக்குநர் குழு ஒப்புக்கொள்ளும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 85 கோடி டாலருக்கு வாங்குவதாக பிளிப்கார்ட் அறிவித்தது. ஆனால் இந்த தொகையை ஸ்நாப்டீல் இயக்குநர் குழு ஏற்கவில்லை. இந்த நிலையில் புதிய தொகையினை பிளிப்கார்ட் அறிவித்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த இணைப்பு முடிவடையும் என தெரிகின்றன. இது தொடர்பாக பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்கள் கருத்து ஏதுவும் தெரிவிக்கவில்லை.

ஸ்நாப்டீல் நிறுவனத்தின் வசம் பிரீசார்ஜ் மற்றும் வல்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களை மற்ற நிறுவனங்களிடம் விற்பதற்கான பேச்சு வார்த்தையும் பிளிப்கார்ட் தனியாக நடத்தி வருகிறது. இது குறித்த முழுமையாக தகவல்களும் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பிபீம் மறுப்பு

தவிர அகமதாபாத்தை சேர்ந்த இன்பிபீம் நிறுவனம் ஸ்நாப்டீலை வாங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறு என இன்பிபீம் மறுத்திருக்கிறது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தை பிளிப்கார்ட் வாங்கும்பட்சத்தில் இ-காமர்ஸ் துறையில் நடக்க இருக்கும் மிகப்பெரிய கையகப்படுத்தல் இதுவாக இருக்கும். கடந்த 2016-ம் ஆண்டு ஸ்நாப்டீல் சந்தை மதிப்பு 650 கோடி டாலராக இருந்தது. ஆனால் தற்போது 95 கோடி டாலருக்கு வாங்க பிளிப்கார்ட் விருப்பம் தெரிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT