பிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஸ்நாப்டீல் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. ஸ்நாப்டீல் நிறுவனத்தை சுமார் ரூ.5,500 கோடிக்கு ( 85 கோடி டாலர்) கையகப்படுத்த பிளிப்கார்ட் திட்டமிட்டது. ஆனால் இந்த தொகையை ஸ்நாப்டீல் மறுத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஸ்நாப்டீல் நிறுவனத்தை முழுமையாக பரிசீலனை செய்த பிறகு இந்த தொகையை வழங்க பிளிப்கார்ட் முன்வந்திருக்கிறது. ஆனால் இந்த தொகையை ஸ்நாப்டீல் இயக்குநர் குழு நிராகரித்தது. நிறுவனத்தை பரிசீலனை செய்த போது நல்ல அறிக்கை கிடைத்திருந்த போதும் இந்த மதிப்பீடு குறைவாக இருப்பதாக ஸ்நாப்டீல் நிறுவனம் கருதுகிறது.
ஸ்நாப்டீல் நிறுவனம் இன்னும் 20 கோடி டாலர் கூடுதலாக எதிர்பார்ப்பதால் இழுபறி நீடிக்கிறது.
இருந்தாலும், ஸ்நாப்டீல், நிறுவனத்தை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை இன்னும் தொடர்கிறது என்னும் தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்து பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், சாப்ட்பேங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் சாப்ட்பேங்க் இந்த இணைப்பு பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிளிப்கார்ட் சார்பாக எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்தை ஆராய்ந்து அறிக்கை வழங்கியதாக தெரிகிறது. இந்த அறிக்கை சில நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே பிளிப்கார்ட் நிறுவனம் 85 கோடி டாலர் தொகையை முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த இரு நிறுவனங்களும் இணையும்பட்சத்தில், இந்திய இ-காமர்ஸ் துறையில் நடக்கும் மிகப்பெரிய இணைப்பாக இருக்கும்.