ஏர்டெல் நிகர லாபம் 75% சரிவு
பெங்களூரு டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் நிகர லாபம் 75 சதவீதம் சரிந்திருக்கிறது. டெலிகாம் துறையில் போட்டி அதிகரித்திருப்பதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. நிறுவனத்தின் ஆப்பிரிக்க செயல்பாடுகள், இந்திய டிவி பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நிகர லாபம் ரூ.367 கோடியாக மட்டும் இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலாண்டி ல் ரூ.1,462 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த 18 காலாண்டுகளில் மிக குறைந்த நிகர லாபத்தை ஏர்டெல் பெற்றிருக்கிறது.
நிறுவனத்தின் வருமானமும் 14 சதவீதம் சரிந்து ரூ.21,958 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.25,546 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் கடன் ரூ.91,400 கோடியில் இருந்து ரூ.87,840 கோடியாக சரிந்திருக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 20% உயர்வு
தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 20.22 சதவீதம் உயர்ந்து ரூ.3,893 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.3,238 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.22,185 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.19,322 கோடியாக இருந்தது. இதர வருமானம் 25.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 1.04 சதவீதத்தில் இருந்து, 1.24 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.32 சதவீதத்தில் இருந்து 0.44 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.866 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை தற்போது ரூ.1,558 கோடியாக அதிகரித்திருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.4 சதவீதமாக இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சபட்ச விலையை தொட்டது.
ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 16% சரிவு
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் நிகர லாபம் 16.06 சதவீதம் சரிந்து ரூ.1,306 கோடியாக இருக்கிறது. இந்த காலாண்டில் வாராக்கடன் இரு மடங்காக உயர்ந்ததை அடுத்து நிகர லாபம் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,556 கோடியாக நிகர லாபம் இருந்தது.
அதே சமயம் வங்கியின் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13,852 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது 14,052 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 2.54 சதவீதத்தில் 5.03 சதவீதமாக அதிகரித்தது. அதேபோல நிகர வாராக்கடன் 1.08 சதவீதத்தில் இருந்து 2.30 சதவீதமாக அதிகரித்தது. அதே சமயத்தில் வாராக்கடனுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் பெரிய மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,117.17 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை, தற்போது ரூ.2,341 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் 1.90 சதவீதம் இந்த பங்கு உயர்ந்து முடிந்தது
ஹீரோமோட்டோ கார்ப் நிகர லாபம் 3.5% உயர்வு
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.5 சதவீதம் உயர்ந்து ரூ.914 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.883 கோடி நிகர லாபம் ஈட்டியது. செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானம் 7.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.8,010 கோடியாக இருந்த வருமானம் தற்போது ரூ.8,612 கோடியாக இருக்கிறது.
கடந்த காலாண்டில் வாகன விற்பனை 6.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் 17,45,389 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் முடிந்த ஜூன் காலாண்டில் 18,53,647 வாகனங்கள் விற்பனையானது. அடுத்த சில காலாண்டுகளில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்தார்.