மத வழிபாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இலவச அன்னதான பொருள்கள், பிரசாதங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது என மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. அன்னதான மையங்களில் தயாராகும் உணவுகளுக்கும் வரி விதிக்கப்படும் என ஊடகங்களில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இலவச உணவுகளுக்கு வரி கிடையாது என்றும், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், தர்காக்கள் உள்ளிட்டவற்றில் விற்கப்படும் பிரசாதங்களுக்கு வரி கிடையாது என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் உள்ளிட்டவை மற்றும் அதைக் கொண்டு வரப் பயன்படுத்தும் வாகன போக்குவரத்து உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் என தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி என்பது பல அடுக்கு வரி விதிப்பு. இறுதி நுகர்வோர் வரி விலக்கு அல்லது வரிச் சலுகை பெறுவர். அது பயன்படுத்தும் பொருளைப் பொறுத்ததாகும். இதனால் இறுதி நிலை உபயோகத்தைப் பொறுத்துதான் விலக்கு பெற முடியும்.