ஐடிஎப்சி மற்றும் ஸ்ரீராம் கேபிடல் நிறுவனங்கள் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பை இந்த குழுமங்கள் மும்பையில் நடத்தியது. நிறுவனங்கள் இணைவதற்கான பேச்சு வார்த்தை அடுத்த 90 நாட்கள் நடக்கும். தற்போதைய தற்காலிக ஒப்பந்தத்தில் நிறுவனங்கள் இணையும் பட்சத்தில் ஐடிஎப்சி தாய் நிறுவனமாக (ஹோல்டிங்) இருக்கும். ஸ்ரீராம் கேபிடலைச் சேர்ந்த ஸ்ரீராம் சிட்டியூனியன் பைனான்ஸ் ஐடிபிஐ வங்கியுடன் இணையும். ஐடிஎப்சியின் துணை நிறுவனமாக ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் இருக்கும். அதேபோல பட்டியலிடப்படாத ஆயுள் மற்றும் பொதுகாப்பீட்டு நிறுவனங்கள் ஐடிஎப்சியுடன் இணையும்.
``நிறுவனங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறோம். அடுத்த சில நாட்களுக்கு பேச்சு வார்த்தை நடக்கும். இதுவரை வரை எந்தவிதமான பரிவர்த்தனையும் நடக்கவில்லை’’ என ஸ்ரீராம் கேபிடலின் தலைவர் அஜய் பிரமல் தெரிவித்தார். மேலும் இந்த குழுமங்கள் இணைவதன் மூலம் மிகப்பெரிய நிதி சார்ந்த நிறுவனத்தை உருவாக்க முடியும் எனவும் பிரமல் தெரிவித்தார்.
``இரு குழுமங்கள் இணைவதன் மூலம் இரு குழுமங்களைச் சேர்ந்த பங்குதாரர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைத்து பங்குதாரர்களுக்கும் பலனில்லை என்னும் பட்சத்தில் இந்த இணைப்பு பேச்சு வார்த்தையை நாங்கள் மேற்கொண்டு தொடரமாட்டோம்’’ என ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் ஆர்.தியாகராஜன் தெரிவித்தார்.
``இணைப்புக்கு பிறகு ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் மற்றும் ஸ்ரீராம் மியூச்சுவல் பண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணையும். இணைப்புக்கு பிறகான நிறுவனம் பட்டியலிடப்படும் என ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக ராஜிவ் லால் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களும் அனுமதி கிடைத்த பிறகு நாங்கள் ஒழுங்குமுறை ஆணையங்களை அணுகுவோம். அதற்கான ஒட்டுமொத்த இணைப்பும் முடிவடைய இன்னும் 24 மாதங்கள் ஆகலாம்’’ என லால் கூறினார்.
``ஒரு வங்கியில் 10 சதவீதத்துக்கு மேல் கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்குகள் இருக்க கூடாது. ஸ்ரீராம் குழுமத்தில் 20 சதவீதத்துக்கு மேல் பிரமல் என்டர்பிரைசஸ் பங்கு வைத்திருக்கிறது. பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம் பின்வாசல் வழியாக வங்கித்துறையில் நுழையவில்லை. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம். நாங்கள் ஸ்ரீராம் குழுமத்தில் ஒரு முதலீட்டாளர்களாக இருக்கிறோம். ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் பட்சத்தில் தவிர எங்களுடைய முதலீடுகளைத் தொடரவே விரும்புகிறோம்’’ என பிரமல் கூறினார்.- ஐஏஎன் எஸ்.