வணிகம்

இ-காமர்ஸ் நிறுவனங்கள் எம்ஆர்பி விலையை குறிப்பிட வேண்டும்: 2018-ம் ஆண்டிலிருந்து புதிய விதிமுறைகள்

பிடிஐ

இ-காமர்ஸ் நிறுவனங்கள் எம்ஆர்பி (அதிகபட்ச விற்பனை விலை) விலையை தங்களது தளத்தில் காட்ட வேண்டும் என அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. வரும் ஆண்டிலிருந்து இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட உள்ளன. நுகர்வோர் நலனை பாதுகாக்கும் விதமாக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. எம்ஆர்பி விலை மட்டுமில்லாமல், பொருளின் இதர விவரங்கள் மற்றும் காலாவதியாகும் தேதி, வாடிக்கையாளர் சேவை எண் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டும். பேக்கேஜிங் பொருட்கள் சட்ட விதிமுறைகள் 2011-ன் படி நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் இந்த புதிய விதிமுறைகளை கடந்த மாதம் உருவாக்கியுள்ளது. நிறுவனங்களின் குறை கேட்புக்கு பிறகு அடுத்த ஆறு மாதங்களில் இது செயல்படுத்தப்படும்.

சாதாரண முறையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு போல ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும். தற்போது ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு எம்ஆர்பி விலை மட்டும் காட்டப்படுகிறது. இதனால் பொருள் தொடர்பாக கூடுதல் விபரங்களையும் லேபிளில் சேர்க்க வேண்டும் என நிறுவனங்களிடம் பேசியுள்ளோம் என்று நுகர்வோர் விவகாரத் துறையின் மூத்த அதிகாரி குறிப்பிட்டார். புதிய விதிமுறைகளில், பொருளின் விலை தவிர இதர விபரங்களாக பொருள் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரித்த நாடு, வாடிக்கையாளர் சேவை விபரங்களும் லேபிலில் இடம்பெற வேண்டும்.

புதிய விதிமுறைகள் குறித்து நிறுவனங்களின் குறை கேட்புக்கு பிறகு 2018ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதை நடைமுறைக்கு வரும். ஆன்லைன் நிறுவனங்கள் இதை கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார். இந்த விபரங்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய அச்சுகளில் காட்டப்பட வேண்டும். ஆன்லைன் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT