வணிகம்

புதிய வாகனங்கள் பதிவில் தொடரும் தாமதம்

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் புதிய வாகனங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக வாகனங்கள் வாங்கியவர்கள் அவற்றை வீட்டிலேயே முடக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய வாகனங்களுக்கு ஜிஎஸ்டி முறையில் 28 சதவீத வரிவிதிக்கப்படுகிறது. புதிய வாகனங்களை பதிவு செய்வதற்காக வட்டாரப்போக்குவரத்து அலுவலக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்யவேண்டும். பின்னர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதிவு செய்யப்படும்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் 50% வரி மாநில அரசுக்கும், 50 % வரி மத்திய அரசுக்கும் செல்கிறது. இந்த வரி விதிப்பு விகிதத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆன்லைனில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து 15 நாட்களாகியும் புதிய வாகனப் பதிவு நடைபெறவில்லை.பிஎஸ் 4 வாகனங்கள் பதிவு விவகாரத்தின்போதும் புதிய வாகனம் பதிவுக்கு 15 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலைமை தற்போது சீரடைந்து வந்த நிலையில் ஜிஎஸ்டியால் மீண்டும் வாகனங்களைப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆன்லைனில் ஜிஎஸ்டி வரி விதிப்பு விவரங்களைப் பதிவு செய்ய முடியாமல் உள்ளது. இதனால் புதிய வாகனங்களுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்திய பிறகுதான் பதிவுக்கு வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

SCROLL FOR NEXT